தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இயக்குனர் பி. வாசுவிற்கு இன்று பிறந்த நாள். தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர் பி. வாசு வணீக ரீதியாக பல வெற்றி படங்களை கொடுத்தவர். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பல படங்களை இயற்றியுள்ளார். 2004ல் வெளியான "ஆப்த மித்ரா" எனும் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்.
பல வெற்றிப்படங்களின் ஆசான்:
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். அதற்கு பிறகு அவர் இயக்கிய சின்ன தம்பி, உழைப்பாளி, பாண்டித்துரை, மன்னன் மற்றும் பல படங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் வெளியான "சந்திரமுகி" திரைப்படம் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றது. தற்போது சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக பி. வாசு இதை பற்றி யோசித்து வந்த நிலையில் தற்போது தான் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. சந்திரமுகி 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் லீட் ரோலில் நடிக்கிறார்.
குஷ்பூவின் ஆஸ்தான குரு:
இன்று பிறந்தநாள் காணும் பி. வாசுவிற்கு பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். குஷ்பூ ஒருமுறை இயக்குனர் பி. வாசு பற்றி கூறுகையில் பி. வாசு சார் என்னுடைய ஆஸ்தான குரு. என் திறமையை நம்பிய ஒருவர். என்னால் சிறப்பாக உழைக்க முடியும் என நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்து என் வாழ்க்கையை வடிவைமைத்ததில் முக்கியமான பங்கு அவரை தான் சேரும். அனைத்திற்கும் மிகவும் நன்றி என கூறியிருந்தார் நடிகை குஷ்பூ.
பி. வாசு - பிரபு கூட்டணி :
பி. வாசு மற்றும் பிரபு கூட்டணி என்றுமே ஒரு வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. முதன்முதலாக சினிமா சரித்திரத்தில் அதிக நாள் ஓடிய முதல் திரைப்படமாக சாதனை படைத்த திரைப்படம் சின்ன தம்பி. இப்படத்தினை தொடர்ந்து இருவரின் கூட்டணியில் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. லீட் ரோலில் இல்லை என்றாலும் பி. வாசு திரைப்படங்களில் நிச்சயமாக ஏதாவது ஒரு கதாபாத்திரமாக பெரும்பாலும் நடிகர் பிரபு நடித்திருப்பார். உதாரணமாக சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினியின் நண்பராக, கன்னடத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் கதாபாத்திரத்தின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் பிரபு.
பி. வாசு - சத்யராஜ் கூட்டணி :
90களில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய ஒரு படம் என்றால் அது பி. வாசு இயக்கத்தில் நடிகர் சத்யராஜ், குஷ்பூ, கவுண்டமணி மனோரமா நடித்த "நடிகன்" திரைப்படம் தான். அந்த படம் பட்டி தொட்டி எல்லாம் சரியான ஹிட் அடித்தது. அதன் மூலம் நடிகர் சத்தியராஜ் வாழ்க்கையே மாறியது. அந்த படத்தின் வெற்றி அடுத்து பத்து ஆண்டுகளுக்கு சத்யராஜின் திரைவாழ்விற்கு தொடக்கமாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
குஷ்பூ, சத்தியராஜ், பிரபு மற்றுமின்றி பல நடிகர்களுக்கும் பெரும் வழிகாட்டியை இருந்தவர் இயக்குனர் பி. வாசு. அவர் மேலும் மேலும் பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும். அவர் ஆரோக்கியத்துடனும், நலனோடும் நீண்ட நாட்கள் நீடுடி வாழ வாழ்த்துக்கள். ஹாப்பி பர்த்டே வாசு சார்.