பிளடி பெக்கர்
அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் பிளடி பெக்கர். நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி , மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி எம் கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபந்துலா, மெரின் பிலிப், ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது சர்வ பிலால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நெல்சன் திலிப்குமார் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த படத்துக்கு கவின் வேணாம்
நிகழ்ச்சியில் பேசிய நெல்சன் " பிளடி பெக்கர் படத்தில் கவினை நடிக்க வைக்கலாம் என சிவபாலன் என்கிட்ட சொன்னார். நான் உனக்கு ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன். நீ இதுல உன்னோட நண்பனுக்கு உதவி பண்ண நெனச்சு என்னையும் கவுத்தி நீயும் கவுந்து அதெல்லாம் வேணாம். கவின் இந்த படத்துக்கு வேணாம். இன்னைக்கு இருக்க மார்கெட்க்கு கவின் செட் ஆக மாட்டான். நீ வேற யாராவது சொல்லு நாம ட்ரை பண்ணலாம். நான் கவினுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சா நான் தனியா பண்ணிடுறேன். இந்த படத்துக்கு நாம தனுஷ் இல்லனா விஜய் சேதுபதிய கேக்கலாம்னு சொன்னேன். சிவபாலன் பொறுத்தவரை அவனுக்கு பிடிக்கலனா ரெண்டு நாள் கழிச்சுதான் சொல்லுவான். எல்லாம் பேசின பிறகும் கவின் தான் இந்த படத்துல நடிக்கனும்னு சொன்னான். நானும் ஓக்கே சொல்லிட்டேன். எனக்கு எந்த ஆங்கிள்ல பாத்தாலும் கவின் சரியா இருப்பானு தோனல. படம் முடிந்த பிறகு நான் படம் பார்த்தேன். படத்தில் கவின் ரொம்ப எக்ஸலண்டா நடிச்சிருக்கான். நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ண நினைச்சேனு எனக்கு அப்போதான் தெரிஞ்சது. " என்று நெல்சன் தெரிவித்துள்ளார்.