சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக உலகளவில் 400 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க படத்தில் ரஜினி மாஸ் காட்டினாலும் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் பெருமளவிலான ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். மேலும் அவர் நடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் விநாயகன் நடித்த வர்மன் கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற மலையாள நடிகர் நடிக்க இருந்ததாகவும் ஒரு சில காரணங்களால் இந்த முடிவை மாற்ற வேண்டியதாக இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மலையாள சூப்பர்ஸ்டார்
படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவராஜ் குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு சில காட்சிகளில் வந்துபோனாலும் அவர்களுக்கு மாஸான எண்ட்ரியைக் கொடுத்திருக்கிறார் நெல்சன். இதனால் மலையாள மற்றும் கன்னட ரசிகர்கள் மத்தியில் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் நடித்த வர்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் மலையாள நடிகர் மம்மூட்டியிடம் ரஜினி கேட்டதாகவும் படத்தில் நடிப்பதற்கு மம்மூட்டி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ரஜினி அடிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்த முடிவை மாற்றிவிட்டதாக தெரிய வந்திருக்கிறது.
தகவல் உண்மையானதா?
ஒரு பக்கம் இந்தத் தகவல் காட்டுத்தீப் போல் பரவி மம்மூட்டி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு வேளை இந்தப் படத்தில் மம்மூட்டி நடித்திருந்தால் அது நிச்சயம் பார்ப்பதற்கு புதிதாக இருந்திருக்கும் என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. அதே நேரத்தில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ”மம்மூட்டியை தான் நடிக்கத் தேர்வு செய்யவில்லை என்றும், எனினும் வேறு ஒரு பெரிய ஸ்டார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் பார்வையாளர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று தோன்றியதாக” நெல்சன் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்த வித குறையும் இல்லாமல் விநாயகன் சிறப்பாகவே செய்திருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.