ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், ரஜினிகாந்தின் புதிய படத்தை நெல்சன் இயக்குவது சமீபத்தில் உறுதியானது. தனது டுவிட்டர் பக்கத்தில் நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்குவதை தனது பயோ-வில் அப்டேட்டாக செய்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், தனியார் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, தலைவர் 169 படத்தை அடுத்து தனுஷை வைத்து நெல்சன் படம் இயக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கோலிவுட்டில் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷை நெல்சன் சந்தித்ததாகவும், அவரிடம் ஒன் - லைன் கதையை சொல்லியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு கதை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், இப்படங்களை முடித்துவிட்டு நெல்சன் படத்தில் பணியாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழில் பா. பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் தான் இயக்கும் அடுத்த படம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் என்று கடந்த 2021 ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், விரைவில் தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கப்போவது யாரு ராமர் நடிக்க இருப்பதாகவும், ஒரு சில காட்சிகளில் ரோபோ சங்கர் தோன்ற இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் ரோபோ ஷங்கர் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, நடிகர் தனுஷ் இயக்குநர் கனவு பற்றி பேசும்போது, உண்மையில், எனக்கும் படம் இயக்குவதில் அதிக ஆர்வம் உள்ளது. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு அற்புதமான ஸ்கிரிப்ட் என்னிடம் உள்ளது, அதை விரைவில் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
பிற முக்கியச் செய்திகள்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்