உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் ஹிட் ஆகாது என்று நடிகர் கார்த்திக் கூறியதாக இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.
1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது.
கஷ்டப்படும் ஒருவரை இன்னொருவர் கைதூக்கிவிடுவார். ஆனால், அவர்கள் உயர்ந்த பிறகு கைதூக்கியவரை கழற்றிவிடுவார்கள். இதுமாதிரி சம்பவம் எல்லாருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும். இதைத்தான் விக்ரமன் கருவாகக் கொண்டு உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தை உருவாக்கினார். படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இப்போதும் அந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் அபிமானம் உள்ளது.
இயக்குநர் விக்ரமன் பல வருடங்களுக்கு முன்னர் அளித்தப் பேட்டி ஒன்றில் அந்தப் படத்தில் நடிக்க கார்த்திக் காட்டிய தயக்கம் பற்றி பேசியிருப்பார். அதில் அவர், சார் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. ஏன்னா நான் ஏற்கெனவே நடிச்ச `நந்தவனத்தேரு' படத்தோட கதையும் இதுவும் ஒரேமாதிரி இருக்குது. இது சரிப்பட்டு வருமா. எனக்கு நடிக்கலாமா... வேணாமான்னு ஃபீலிங்கா இருக்கு' என்று சொன்னார்னு சொல்லியிருப்பாரு. அதே கருத்தைத் தான் ரமேஷ் கண்ணாவும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
"விக்ரமன் சார் வித்தியாசமா படம் செய்வார். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் வெற்றி பெறாது என்று அதில் நடித்த கார்த்திக் சொன்னார். நானும் அவரிடம் போய், சார் கார்த்திக் இப்படி சொல்றாரு. நந்தவனத் தேரு மாதிரி இருக்குன்னு சொல்றாரு என்றேன். அதற்கு விக்ரமன் நான் அந்தப் படம் பார்த்ததில்லை. ஆனால் என்னுடைய் ட்ரீட்மென்ட் வேற என்றார். படம் சூப்பர் ஹிட் ஆனது. கார்த்திக்கே கூட அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை" என்று ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.
இயக்குநர் மணிவண்ணனுடன் பணி செய்த அனுபவங்களைப் பற்றியும் ரமேஷ் கண்ணா பேசினார். மணிவண்ணன் சார் சிறந்த நடிகர். ஸ்பாட்டில் அவருடன் வேலை செய்வது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஸ்பாட்டுக்கு வரும்போதே அவரே சில பஞ்ச்சுடன் வந்து தெறிக்க விடுவார். என்னுடைய தொடரும் படத்திற்காக அவர் நடித்துக் கொடுத்தார். விவேக், மணிவண்ணன் வைத்து நான் காமெடி ட்ராக்கே எடுத்து முடித்துவிட்டேன். அவருர் எளிமையாக இருப்பார். உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக உயர்ந்தவர். அதனால் இயக்குநரின் கஷ்டம் புரிந்து நடப்பார். எனக்கு தொடரும் படத்திற்கான வாய்ப்பு ரவிக்குமார் சார் மூலம் கிடைத்தது. நான் அதை ஏற்றுக்கொள்ள தயங்கியபோது அவர் தான் ஊக்கமளித்தார். அப்புறம் படப்பிடிப்பு தொடங்கியது.
அதில் மணிவண்ணன் சார் காமெடி டிராக் எடுத்தேன். ஸ்பாட்டில் தீடீரென ஒருத்தர் என் காதுகிட்ட வந்து சூட்டிங்கை நிறுத்துங்கள் என்றார். ஏன் என்றேன், ஃபில்ம் இல்ல என்றார். அது ஜெமினி கலர் லேப்ஸ் படம். உடனே பக்கத்தில் இருந்த மணிவண்ணன் சார், ரமேஷ் கண்ணா உனக்கு சுக்கிரன் தலை மேல் நிற்கிறார் போல. ஃபில்ம் கம்பெனியிலேயே ஃபில்ம் இல்லைங்குறாங்க என்று டைமிங் ஜோக் சொன்னார். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் என்றார்.