சென்னையில் நடைபெற்ற பேட்மிண்டன் விளையாட்டு தொடர்பான தனியார் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இயக்குநர் லிங்குசாமி (N. Lingusamy) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
‘குடும்பமாக வாக்கு சேகரித்தனர்’
அப்போது பேசிய இயக்குநர் லிங்குசாமி, “அன்புமணி ராமதாஸ் எனக்கு சகோதரர் போன்றவர். எலக்ஷன் நேரத்தில் பொதுவாக நான் முடிவுகளை பெரிதாக பார்க்க மாட்டேன். ஆனால் இந்த முறை ஒரே ஒரு தொகுதியை மட்டும் ரொம்ப ஆர்வமாகப் பார்த்து வந்தேன். நிஜமாகவே.. என் வீட்டில் எனக்கிருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் மாதிரி தான் அன்புமணி ராமதாஸ் சாரின் மகள்களும். அரசியல் தாண்டி, எவ்வளவு அழகாக, அந்தத் தொகுதியில் மட்டும் குடும்பமாகச் சென்று தங்கள் அம்மாவுக்காக வாக்கு சேகரித்தனர். அந்த ஒரு காரணத்துக்காக சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) அந்தத் தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன், ஆனால் அது கடைசி நிமிடத்தில் மிஸ்ஸாகிவிட்டது.
‘அன்புமணி போன்ற தலைவர்கள்..’
எனக்கு இன்னும் சங்கடம் அந்த சின்ன பாப்பாவை நினைத்து தான். ஒவ்வொரு இடத்திலும் சென்று அவங்க வாக்கு கேட்ட விதம் சிறப்பு. ஆனால் தப்பில்லை, நாம் அதை நோக்கி தான் போய்க்கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் அந்த இடத்தைத் தொடுவதற்கு எல்லா தகுதியும் அவங்களுக்கு இருக்கு.
அரசியல்னா கமல் சாரின் பிரதர் ஒரு முறை அழகாக சொன்னார். யார் அடுத்தது அரசியலுக்கு வர வேண்டும் என வரிசைப்படுத்தும்போது மிக முக்கியமான இடத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்களைப் பற்றி சொன்னார். எனக்கும் ரொம்பப் பிடிக்கும், தகுதியின் அடிப்படையில் அவர்களுடைய அரசியல் பார்வை, சமூக நீதி பற்றி அவர்கள் பேசுவது, அப்பறம் இங்க இருக்க வரலாறும் தெரியணும், தமிழ்நாட்டின் புவியியல் பற்றி தெரியணும். நதிகளைப் பற்றிய அவருடைய பேச்சை நான் கேட்டேன். இவ்வளவு பேராற்றல், மிகப்பெரும் அறிவோட இருக்கவங்கள நாம தான் மிஸ் பண்றோம். தப்பு நம்ம பக்கம் தான் இருக்கு. அவங்களுக்கு அது இழப்பு இல்லை. வாழ்த்துகள் சார். இதுபோன்ற விளையாட்டு தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவு தரும், தகுதியான விஷயங்களை நோக்கி நாம் எப்போதும் இருக்க வேண்டும் என ஆசைப்படும் அன்புமணி மாதிரியான தலைவர்களை நாம் மிஸ் பண்ணக்கூடாது. இந்த விழாவில் கலந்துகொண்டது சந்தோஷம்” எனப் பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி, திமுக வேட்பாளர் ஆ.மணியிடம் சுமார் 21 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.