HRA Claim Rules:  வீட்டு வாடகை அலவன்ஸிற்கு வரி விலக்கு பெறுவது என்பது, பழைய வரி விதிப்பு முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


வீட்டு வாடகை அலவன்ஸ் கிளெய்ம் விதிகள்:


வரி செலுத்தும் மாத சம்பளம் பெறும் நபர்கள் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிரிவு 10(13A) இன் கீழ் HRA விலக்கு கோருகின்றனர். ஏப்ரல் மாதத்தில் முன்மொழியப்பட்ட உங்களது முதலீட்டு அறிவிப்பில் பழைய வரி முறையை நீங்கள் தேர்ந்தெடுக்க தவறி இருந்தால், உங்கள் முதலாளி புதிய வரி முறையின்படி வரியைக் கணக்கிட்டிருப்பார். அதாவது HRA மற்றும் பிரிவு 80C விலக்கு இல்லாமல் அவர் வரியைக் கணக்கிட்டிருப்பார். இருந்தபோதிலும், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது இந்த வரி விலக்கைப் பெறலாம். இதற்கு வரும் ஜூலை 31ம் தேதிக்குள் நீங்கள் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.


வீட்டு வாடகை அலவன்ஸை பெறுவதற்கான விதிகள்


HRA ஐப் பெறுவதற்கான விதிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒரு மெட்ரோ நகரத்தில் வசிக்கும் வரி செலுத்துவோர் தனது அடிப்படை சம்பளத்தில் 50 சதவிகிதம் (அகவிலைப்படியையும் சேர்த்து) (பெருநகரங்கள் அல்லாதவற்றில் 40 சதவீதம்) அல்லது உண்மையான எச்.ஆர்.ஏ அல்லது செலுத்தப்பட்ட உண்மையான வாடகை (அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் கழித்து மீதமுள்ள தொகை மற்றும் அகவிலைப்படியில் சேர்த்து) அடிப்படையில் கோரலாம். குறிப்பிட்ட ஆப்ஷன்களில் எது குறைவோ அதை கிளெய்ம் செய்யலாம். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது நீங்கள் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை. இருப்பினும், வாடகை ரசீதுகள் மற்றும் வாடகை ஒப்பந்தத்தை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். வீட்டு வாடகையாக மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் செலுத்தினால், வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தும் முன் TDS-ஐ கழித்துக்கொள்ள வேண்டும்.


சுயதொழில் செய்பவர்களுக்கான வரி விதிகள்:


நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால் அல்லது உங்கள் சம்பள அமைப்பில் HRA சேர்க்கப்படவில்லை என்றால், பிரிவு 10(13A) இன் கீழ் உங்களுக்கு HRA விலக்கு கிடைக்காது. இருப்பினும், 80GG பிரிவின் கீழ் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உங்களின் மொத்த வருவாயில் 25 சதவிகிதம் அல்லது உங்கள் மொத்த வருமானத்தில் 10 சதவிகிதம் கழித்த உண்மையான வாடகை, இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அவற்றின் அடிப்படையில் மாதம் ரூ.5,000 வரை விலக்கு கோரலாம். இருப்பினும், நீங்கள் வசிக்கும் வீடு உங்கள் மனைவி அல்லது மைனர் குழந்தையின் பெயரில் இருந்தால், நீங்கள் இந்த நிவாரணத்தைப் பெற முடியாது. நீங்கள் வசிக்கும் வீடு இந்து பிரிக்கப்படாத குடும்பத்தின் (HUF) பெயரில் இருந்தால், இந்த நிவாரணத்தை நீங்கள் பெற முடியாது.


பெற்றோர் வீட்டில் வாழ்ந்தாலும் பலன் கிடைக்கும்


நீங்கள் உங்கள் பெற்றோரின் வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், அவர்களுக்கு வாடகை செலுத்துவதன் மூலமும் HRA வரி விலக்கின் பலனைப் பெறலாம். ஆனால், நீங்கள் செலுத்தும் வாடகை உங்கள் பெற்றோரின் வருமானமாகக் கருதப்படும். பல சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் ஓய்வு பெற்ற தனிநபர்கள் மற்றும் குறைந்த வரி பிரிவுகளில் இடம்பெறுகின்றனர். இதனால் அவர்களுக்கு விதிக்கப்படும் வரி குறையும். சில நேரங்களில் பெற்றோர்களும் அதிக வரி வரம்புக்குள் விழலாம். எனவே, உங்கள் பெற்றோருக்கு வாடகை செலுத்தி, HRA நன்மைகளைப் பெறுவதற்கு முன், அவர்களது வருவாய் விவரங்களையும் நீங்கள் கணக்கிட வேண்டும்.


பெற்றோரின் வருமானத்துடன் வாடகை வருமானம் சேர்க்கப்படும்


உங்கள் பெற்றோர் உங்கள் சார்பாக செலுத்தப்படும் வாடகையை அவர்களின் வருமானமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருத வேண்டாம். இதற்குக் காரணம், HRA நன்மைகளைப் பெறும்போது அவர்களின் PAN எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். வருமான வரித் துறையிடம் வருடாந்திர தகவல் அறிக்கையும், நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் திறனும் இருப்பதால், எந்த வருமானத்தையும் மறைப்பது கடினமாகிவிட்டது.