நான் படிக்கும் புத்தகங்களில் இருக்கும் விஷயத்தை என் படங்களில் அப்படியே நான் வைக்க மாட்டேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ என படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். தற்போது பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனிடையே தன்னுடைய தம்பி ஹீரோவாக நடிக்கும் டெவில் படத்துக்கு மிஷ்கின் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சுட்டுப்பிடிக்க உத்தரவு, சவரக்கத்தி, மாவீரன், ஆர் யு ஓகே பேபி, லியோ உள்ளிட்ட படங்களிலும் மிஷ்கின் நடித்துள்ளார். இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வரும் மிஷ்கின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் ஒருநாளைக்கு 5 புத்தகங்கள் வாங்குவேன். ஏன் வாங்கினேன் என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் நான் வாங்குவேன். நான் ஒவ்வொரு நாளும் நடு இரவு 3 மணிக்கு தான் தூங்க போகிறேன். அதில் 2 மணி முதல் 3 மணி வரை என்னுடைய வேலை என்ன புத்தகம் புதிதாக இன்று வந்திருக்கிறது என்பதை பார்ப்பது தான். உடனடியாக அமேசான் தளத்தில் ஆர்டர் போட்டு விடுவேன். இதுதான் என்னுடைய வேலை. படிக்க நேரம் இருக்கோ இல்லையோ, வாங்கி போட்டு விடுவேன். குறைந்தப்பட்சம் அந்த புத்தகத்தில் கரு, முன்னுரை என எதையாவது படித்து வைத்து விடுவேன். பின் நேரம் கிடைக்கும்போது அந்த புத்தகம் படிப்பேன்.
ஆனால் நான் படிக்கும் புத்தகங்களில் இருக்கும் விஷயத்தை என் படங்களில் அப்படியே நான் வைக்க மாட்டேன். அதிலிருந்து எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை டெவலப் செய்து வைப்பேன். ஷேக்ஸ்பியர் கதைகளை எடுத்துக் கொண்டால் அது உருவாவதற்கு முன்னால் பல கதைகள் இருக்கிறது. ஒவ்வொன்றாக படித்து படித்து அதன் அடுத்த அத்தியாயம் என்பது உருவாகிறது. எடுத்துக்காட்டாக அரிசியை எடுத்துக் கொண்டால், அரிசி ஒன்று தான் ஆனால் அதை வெவ்வேறு விதமாக சமைக்கலாம் என்பதைப் போல நாங்கள் வெவ்வேறு விதமாக தர முயற்சிக்கிறோம். இதைத்தான் நாங்கள் எல்லாரும் பண்ணுகிறோன். இதில் ஒவ்வொருவரின் அடையாளம் என்பது இருக்கும்” என மிஷ்கின் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Mysskin: “புத்தகம் படிக்கிறது தான் வேலையே” .. நண்பர்களின் சக்ஸஸ் சீக்ரெட் பற்றி பேசிய மிஷ்கின்!