சோக்காடி கிராமத்தில் ஏற்பட்ட சாதி கலவரம் தொடர்பாக இருதரப்பினர் மீது உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி டேம் அடுத்த சோக்காடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான கிரானைட் கற்களை பாலிஷ் செய்து வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அப்படி, கடந்த 29ஆம் தேதி மாலை கோவிலில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடந்தது. அதிலிருந்து வரக்கூடிய தூசி அப்பகுதியில் உள்ள பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில், உணவுகளில் படிந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து நேற்று முன்தினம் பட்டியலினத்தை சார்ந்த இளைஞர் ஒருவர், கோயில் கட்டும் பணியினால் வீடுகள் முழுக்க (டஸ்ட்) தூசு படியுது. அதனால் சுற்றிலும் துணி கட்டி பணியை மேற்கொள்ளுமாறு, இல்லையென்றால் அதுவரை கோயில் கட்டும் பணியை நிறுத்துங்கள் என்று வேலை செய்யும் நபர்களிடம் கூறியுள்ளார். அவர்கள், அப்போது ஊர் பிரமுகரும், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜனிடம் தெரிவித்துள்ளனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று ஏன் கோயில் கட்டும் கட்டுமான பணியை நிறுத்த சொன்னீர்கள் என கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பில் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. அதன்பின் சமாதானமான இருதரப்பினரும் அங்கிருந்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த கே ஆர் பி அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் முப்பதுக்கு மேற்பட்ட போலீசார் சோகடி கிராமத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

இந்த நிலையில் அதிமுக பிரமுகர் ராஜனுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று கற்களை வீசி தாக்கினர். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த கூரை தடிப்பிற்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் பிரச்சனை தொடர்பாக நேற்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு தரப்பினர் வந்த நிலையில் மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் தொடர்புடைய அவர்களையும் பிரச்சனைக்கு காரணமானவர்களையும் கைது செய்யக்கோரி பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. அதனால் சமரசத் தீர்வு எட்டப்படவில்லை.



 

இதை அடுத்து சோக்காடி கிராமத்தில் டிஎஸ்பிக்கள் தமிழரசி, கணேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சோக்காடி கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜா உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பட்டியலினத்தை சேர்ந்த 8 பேரும், மாற்று சமூகத்தை சேர்ந்த 6 பேரும் என 14 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் இவர்கள்மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கோவில் புனரமைப்பு பணியின் போது தூசு பறந்ததாக ஏற்பட்ட தகராறு சம்பவம் சாதி கலவரமாக மாறிய நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலரைச் தேடி வருகின்றனர்.