தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


மிஷ்கினின் மேஜிக் 


 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஸ்ரீ, மிஷ்கின், ஆதித்யா,ராஜ் பரத், நீலிமா ராணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.இளையராஜா இசையமைத்த இப்படம் நியோ-நாயர் வகை படமாகும். த்ரில்லர் கதை களத்துடன் ரசிகர்களை கட்டிப்போட்ட மிஷ்கினின் திரைக்கதை அனைவரையும் பிரமிக்க வைத்தது. வழக்கமான மிஷ்கின் படங்களில் இடம்பெறும் அன்பு தான் இப்படத்தின் அடிப்படை கதையாகும். 


படக்கதை 


ஓநாய் என்று வர்ணிக்கப்படும்  இளைஞனை (மிஷ்கின்) உயிருடனோ பிணமாகவோ பிடிக்கக் காவல்துறை நினைக்கிறது. அதேசமயம் எதிராளி ஒருவனும் அவனைத் தேடுகிறான். இந்த யுத்தத்தில் அடிபட்டு சாக கிடைக்கும் ஓநாயை ஒரு ஆட்டுக்குட்டி (ஸ்ரீ) காப்பாற்றுகிறான். அவனை வைத்து மிஷ்கினை பிடிக்க காவல்துறை நினைக்கிறது. ஸ்ரீயை வைத்து  தன்னுடைய பழியை தீர்த்துக்கொள்ள வில்லன் முனைகிறான். இந்த யுத்தத்தில் ஆட்டுக்குட்டியுடன் ஓநாய் தப்பியதா என்பதே இப்படத்தின் கதையாகும்.. 



ரசிகர்களை கட்டிப்போட்ட படம் 


இந்த படம் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை இருக்கையை விட்டு எழ விடாமல் செய்தது என்றே சொல்லலாம். காரணம் படத்தில் பாடல்கள் இல்லை. அதேசமயம் காட்சியமைப்புகளால் கதை சொல்லும் உத்தி, அசாத்தியமான பின்னணி இசை,அற்புதமான ஒளிப்பதிவு என படம் முழுக்க சில சில குறைகள் இருந்தாலும், அதை எதையும் யோசிக்க விடாமல் செய்து விட்டது. 


ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓநாய் மிஷ்கின் சொல்லும் அந்த 2 நிமிட கதை சொல்லும் காட்சி ரசிகர்கள் கற்பனை செய்துகொள்ளக்கூடிய காட்சிகளின் அழுத்தமாக மாறியது என்பது உண்மையிலேயே மிஷ்கினின் நினைத்து பார்க்க முடியாத திறமை தான்.நந்தலாலாவில் இருந்த மிஷ்கின் அப்படியே உருமாறி வேறு ஒருவராக இப்படத்தில் பரிணாமித்தார்.


மருத்துவ கல்லூரி மாணவராக வரும் ஸ்ரீ, சிபிசிஐடி அதிகாரியாக வரும் ஷாஜி, திருநங்கையாக வரும் பாரதி ஆகியோரும் மனதில் இடம்பிடித்து விட்டார்கள். இந்த படமானது டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி நன்றாக இருக்கும் அளவுக்கு ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். கமர்ஷியல் படமானது பாடல்கள், பிரமாண்டமான காட்சிகள் எல்லாம் நிறைந்தது என்பது இல்லை. இப்படி பாடல்களே இல்லாமலும் படம் எடுக்க முடியும் என்பதற்கு இந்த படம்  மிகப்பெரிய எடுத்துக்காட்டு. 


இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்ததற்காக அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படத்தின் பின்னணி இசையை இலவசமாக பயனாளர்கள் உபயோகித்துக் கொள்ளலாம் என மிஷ்கின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.