விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் முத்தையா பேசும் போது, பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார். இதோ அவை...




‛‛எனக்கு மேடையில் பேச வாராது. இந்த ஆடியோ ரீலீஸ் எனக்கு ரொம்ப முக்கியமானது. என்னோட குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி எதுக்குமே ஆடியோ ரிலீஸ் நடக்கல. ப்ரஸ் மீட் தான் நடந்தது. என்னடா, இத்தனை படம் பண்ணிருக்கோம், ஒரு ஆடியோ நிகழ்ச்சிக்கு அம்மா, அப்பா கூட்டிட்டு போய், அவங்களுக்கு நாம கவுரவம்  கொடுக்கலையேனு எனக்கு ஒரு கவலை இருந்துச்சு. 


அது இன்று தீர்ந்துவிட்டது. நான் சார்ந்த மண்ணில், என் மக்கள் முன், நான் படித்த ஊரில், நான் பிறந்த மண்ணில் இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியா இருக்கு. என்னோட ஏகலைவன் பாரதிராஜா சார் தான். என் மண்ணையும், மக்களையும் சினிமாவுக்கு பயன்படுத்தலாம் என எனக்கு தூண்டுதலாக இருந்தவர் அவர். அவர் முன்னிலையில், சங்கர் சார் முன்னிலையில் எனது பட ஆடியோ வெளியீடு நடப்பது பெரிய விசயம். 


சந்தோசத்தில் எனக்கு பேச்சு வரவில்லை. எல்லோரும் கடமை பட்டிருக்கேன். இந்த மேடை சிறப்பா இருக்க காரணம், யுவன் சார். இந்த படத்தில் நிறைய ப்ளஸ் எனக்கு இருக்கு .அதிதி அறிமுகம் ஆனது ஒரு ஸ்பெஷல். கார்த்தி சார், இரண்டாவது படம் நாம பண்ணுவோம்ய்யா என சொன்னார். அது ரொம்ப சந்தோசம். அவரது குருநாதர் மணிரத்தினம் சார் கூட தான் 3 படம் பண்ணிருக்காரு. அதுக்கு அப்புறம், இரண்டு படம் என் கூட தான் பண்ணிருக்காரு. ரொம்ப நன்றி கார்த்தி சார். 


டீ கடை வெச்சு தான் எங்கப்பா எங்களை வளர்த்தார். எங்கம்மா பழனி, ரொம்ப வெள்ளந்தி. 20 வயதிலும், 12 வயதிலும் திருமணம் ஆனவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்களை சிரமப்பட்டு வளர்த்தார்கள். சாப்பிட்டு நாங்கள் தூங்கிய பிறகு, எங்கள் வயிற்றை தடவி பார்த்து, காலியா இருக்கா என்று பார்க்கும் ஒரு வெள்ளந்தி தாய். அப்படி ஒரு சூழலில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்ததால், அது மாதிரியான படத்தை எடுக்கிறேன். 




சிட்டி கதையை எடுக்க நிறைய பேர் இருக்காங்க. மண் சார்ந்து, மரபு சார்ந்த படங்கள் மிக குறைவாக வருகிறது. 90களுக்கு முன் படங்கள் அப்படி தான் இருந்தது. அதனால் தான், குற்றங்கள் குறைவாக நடந்தது. அதன் பின் நகர வாழ்க்கை படங்கள் வரத் தொடங்கிவிட்டது. உறவுகளை பற்றி சொல்ல இயக்குனர்கள் முன் வரவேண்டும். 


உலகில் எல்லா தவறுகள் நடப்பதும் உறவுகளுக்காக தான். ஒருவன் லஞ்சம் வாங்கி பணம் சேர்ப்பது, அவன் குடும்பத்திற்காக தான். கொஞ்சமா வாங்கினால் பரவாயில்லை; கோடான கோடியை வாங்கி சேர்க்கிறார்கள். அரசியல் பேசுகிறேன் என நினைக்கிறேன்... அது வேண்டாம் நமக்கு. 


சினிமாவிற்கு நான் போகும் போது ,‛அது லட்சத்துல கோடில ஒருத்தன் ஜெயிக்கிறதுடா..’ என என் தந்தை கூறினார். ஆனால், என் மக்கள் மீதான நம்பிக்கையில் போய், ஜெயித்திருக்கிறேன். என் அப்பா, அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை கொடுக்க எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 


பாரதிராஜா சாரை நம்பி பஸ் ஏறிய மாதிரி, இசைக்கு இளையராஜாவை நம்பி தான் பஸ் ஏறினேன். 90களில் உதவி இயக்குனர் ஆவது அவ்வளவு எளிதல்ல. அப்படி தான், இங்கு வந்து சேர்ந்தேன். அப்போது யுவன் அறிமுகமாகி, எங்கு பார்த்தாலும் அவர் பாடல் தான் கேட்டது. அப்புறம் ,அவருடன் படம் செய்ய வேண்டும் என எண்ணினேன். குட்டிப்புலியில் அவரை தான் அணுகினோம். கொம்பனில் அவரை அணுகினோம். அப்போது அவர் பிஸியாக இருந்தார். இப்படி தள்ளிக் கொண்டே போனது. 


விருமன் முடிவானதும், கார்த்தி சாரிடம் கேட்டேன், ‛சார்... யுவன் சார் வேணும்,’ என்று, ‛விடுய்யா... போட்ரலாம்...’ என கார்த்தி சார் உறுதியளித்தார். ரொம்ப நன்றி கார்த்தி சார். நல்ல தரமான பாடல்களை யுவன் சார் போட்டுத் தந்துள்ளார். யுவன் சாருடன் பணியாற்றும் கனவு நிறைவேறியுள்ளது. 






அதிதி மரியாதையான பொண்ணு, சங்கர் சாரும் அவரது மனைவியும் ரொம்ப அழகா பெண்ணை வளர்த்திருக்காங்க,’’ என்று அந்த மேடையில் முத்தையா பேசினார்.