நான் எந்தப் படத்திலுமே சாதிப் பெருமை பேசவே இல்லையே. ஒரு படத்தைப் படமா பாருங்க. பிடிச்சா பாருங்க. நல்லா இருந்தால் படம் ஓடும். இல்லாவிட்டால், படம் தியேட்டரை விட்டு ஓடும் என்று இயக்குநர் எம்.முத்தையா பேசியுள்ளார்.


குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன்,தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தியை வைத்து இயக்கியுள்ள விருமன் படத்தை முடித்துள்ளார்.  இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.




இந்நிலையில் இவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்தப் பேட்டி சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.


அந்தப் பேட்டியில் முத்தையா, "நான் எந்தப் படத்திலுமே சாதிப் பெருமை பேசவே இல்லையே. ஒரு படத்தைப் படமா பாருங்க. பிடிச்சா பாருங்க. நல்லா இருந்தால் படம் ஓடும். இல்லாவிட்டால், படம் தியேட்டரை விட்டு ஓடும்.


நான் எனது படத்தில், கதைக்கான பின்புலம் மட்டுமே சொல்லியிருப்பேன். அந்த பின்புலத்தை பெரிதாக்கிப் பேசுகிறீர்கள். நீங்கள் அதை ஏன் சாதிப் பெருமையாகப் பார்க்கிறீர்கள். 


நான் மட்டும் ஒரு பின்புலத்தை சொல்லவில்லை. நிறைய பேர் பல்வேறு பின்புலத்தை வைத்து படம் எடுக்கிறார்கள்.நான் சாதிப் பெருமை பேசுகிறேன் என்று சொல்வதே தவறு. நான் எந்தப் படத்திலுமே அப்படி சாதிப் பெருமை பேசவே இல்லை. ஆனால், அப்படி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.


நான் குறிப்பிட்ட ஒரு பின்புலத்தை மட்டுமே சொல்கிறேன். இன்று நான் அந்த பின்புலத்தைவிட்டுவிட்டு வேறு ஒரு பின்புலத்தை வைத்துப் படம் எடுத்தாலும் கூட இப்படித்தான் குறை சொல்வார்கள்.


தமிழர்கள் அனைவருமே வீரர்கள் தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. சண்டை என்பது இன்றைய சினிமாவுக்குத் தேவை. அதனால் நான் எந்த பின்புலத்தை மாற்றினாலுமே என்னை வைத்துப் பிரச்சினையாக்குவார்கள்.




என் படத்தில் எந்தப் படம் குறிப்பாக சாதிப் பெருமையைப் பேசுகிறது என்று நீங்கள் எடுத்துச் சொல்லுங்களேன்.
சாதியை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்? இதனால் யாருடைய வாயும் வயிறும் நிறையப் போகிறது. சாதி சமூகத்தை பிரிக்கிறது என்று கூறினால் சுதந்திரம் எப்படிக் கிடைத்திருக்கும்.


சாதி அடக்குமுறை நம் அப்பா காலத்தில் இருந்ததைப் போல் இன்று இல்லையே. நாம் சாதி இருக்கு என்று நினைத்தால் இருக்கிறது. இல்லை என்று நினைத்தால் இல்லை" என்று கூறியுள்ளார்.


அவரது இந்தப் பேட்டியே தனி விவாதப் பொருளாக மாறியுள்ளது. முத்தைய ரொம்பவும் மேம்போக்காக தான் படத்தில் காட்டுவது சாதிப் பெருமையல்ல பின்புலம் எனக் கூறி தப்பிக்கிறார். அவரது பேச்சு சமூகத்தில் உள்ள சாதிப் பிரச்சினையைப் பற்றி புரிந்ததாகவே இல்லை என்று சிலர் தங்களின் வாதங்களை முன்வைத்துள்ளனர். இன்னும் சிலர் முத்தையா சொல்வதில் என்னத் தப்பு. மோகன்.ஜி, இயக்குநரைத் தொடர்ந்து இப்போது ஊடகங்கள் முத்தையாவைக் குறிவைக்கின்றன என வாதிடுகின்றன.