தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான எடிட்டராக இருந்த மோகனின் மூத்த மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவியின் அண்ணனுமான இயக்குநர் மோகன் ராஜா இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


தமிழ் சினிமாவில் 2003ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றதை அடுத்து மோகன் ராஜா தமிழில் ரீ மேக் செய்த படம் தான் ஜெயம் ரவி, சதா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'ஜெயம்'. தமிழிலும் பட்டையை கிளப்பிய அப்படத்தால் தான் மோகன் ராஜா ஜெயம் ராஜாவாகவும் , ரவி ஜெயம் ரவியாகவும் பிரபலமானார்கள். 


 



முதல் படம் மட்டுமின்றி அடுத்தடுத்து மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் S/O மகாலட்சுமி, 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'தில்லாலங்கடி' என அனைத்து படங்களிலும் கதாநாயகன் ஜெயம் ரவி தான். வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்த மோகன் ராஜாவிற்கு திரையுலகில் வேறொரு பெயரும் உண்டு. ரீ மேக் படங்களாகவே தொடர்ந்து வெற்றி கொடுத்ததால் ரீ மேக் ராஜா என அழைக்கப்பட்டார். 



இந்த பட்டத்தை முறியடிக்க வேண்டும் என தனது ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் அவர் எழுதி இயக்கிய கதை தான் தனிஒருவன். பிரமாண்டமான ஹிட் படமாக வெற்றி பெற்றது. பல பிரிவுகளின் கீழ் விருதுகளையும் குவித்தது. 2015ம் ஆண்டு வெளியான படங்களில் முதலிடத்தை பிடித்தது. அப்படம் தெலுங்கிலும் ரீ மேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. அடுத்ததாக  சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்', விஜய் நடித்த 'வேலாயுதம்' படமும் ஹிட் கொடுத்து அவரின் அந்தஸ்தை முன்னணி இயக்குநர் பட்டியலில் இடம் பிடிக்க வைத்து. 


வேலைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் யு டர்ன் அடித்து ரீ மேக் படம் எடுத்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீ மேக் படமான 'காட்பாதர்' படத்தை 2019ம் ஆண்டு வெளியிட்டார். அப்படம் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது.  


'தனி ஒருவன்' மாதிரி சூப்பர் ஹிட் படங்களை மோகன் ராஜாவிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். இன்று ஆண்டு அதற்கான முயற்சிகளை அவர் துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.