தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் திரௌபதி 2 படம் எப்படி உருவானது என்பதை இயக்குநர் மோகன் ஜி அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், வேல ராமமூர்த்தி, நட்டி என பலரும் நடித்துள்ள படம் “திரௌபதி 2”. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 10ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி திரௌபதி 2 படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, “இது 5வது படமாக இருந்தாலும், வரலாற்று படம் என்பதால் முதல் படமாகவே இருந்தது. என்னுடன் முதல் படத்தில் இருந்து வேலை பார்த்த நபர்கள் தான் இப்படத்திலும் பணியாற்றினார்கள். 31 நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் செய்யப்பட்டது. அடுத்தப்படம் எனக்கு இல்லாமல் கூட போகலாம். ஆனால் என்னுடன் இவ்வளவு உழைப்பை கொட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திரௌபதி 2 படம் பற்றி ரிச்சர்ட் ரிஷியிடம் ஐடியா சொன்னேன்.நான் திரௌபதி படம் எடுக்கும்போது ஷூட் முடிந்தபிறகு தான் சம்பளம் கொடுத்தேன். அப்படியே தான் இதிலும் ஃபாலோ பண்ணினார்.அவர் இன்றளவும் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை. ஒரு வருடமாக இப்படத்துக்கு அவர் எடுத்த முயற்சிகள் கொஞ்சம் நஞ்சமில்லை. நான் சொன்னதை விட இப்படத்துக்கு பட்ஜெட் அதிகமாகி விட்டது.
ட்ரெய்லரில் ஒன்றே குலம் ஒருவன் அல்ல தேவன் என்ற வசனம் வைக்கப்பட்டிருக்கும். அந்த டயலாக்கை படிக்கும்போதே எனக்கு பதற்றம் ஏற்பட்டது. அதனை எழுதிய எழுத்தாளர் பத்மா சந்திரசேகரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அதற்கு இந்தியா பல்வேறு சமூகங்கள், மதம் சார்ந்த மக்கள் நாடு. ஒரு மதத்திற்கு சொந்தமானது கிடையாது என்பது தான் இதன் அர்த்தமாகும். அதாவது ஒரு கடவுளை மட்டும் நம்மால் வழிபட முடியாது. அத்தனை கடவுளையும் ஏற்றுக்கொண்டு மரியாதை செலுத்த வேண்டும்” என்பதை திரையில் காட்சிகளாக கொண்டு வந்திருக்கிறோம்.
அதேபோல போன படத்தில் மண், பெண் பற்றி வைத்த வசனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் திரௌபதி 2 படத்தில் இது அண்ணாமலையார் மண் என வசனம் வைக்கப்பட்டது. ஆனால் யாரும் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எல்லாரும் ட்ரெய்லரை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாளில் 16 மணி நேரம் வேலைப் பார்த்தோம். பிக்னிக் போன மாதிரி தான் ஷூட்டிங் ஸ்பாட் இருக்கும்.
நான் அரியலூர் மக்கள் சிமெண்ட் தொழிற்சாலையால் படும் பாதிப்பை மையமாக கொண்டு தான் படம் எடுக்க முடிவு செய்தேன். இதற்கிடையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் விருந்தினராக சென்றிருந்தேன். நான் முதன்முதலாக காசிக்கு சென்றேன். நான் மிகப்பெரிய சிவ பக்தன். கோயிலை வணங்கி விட்டு வந்தால் அங்கு ஒரு நந்தி இருக்கும். அந்த நந்தியின் முகம் இஸ்லாமிய மசூதியைப் பார்க்க இருக்கும். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எப்படி இந்து பூமி என வர்ணிக்கப்படும் காசியில் இந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடை தேடல் எனக்கு கிடைத்தது. இதுதொடர்பாக இணையத்தில் தேடியபோது அது தமிழ்நாடு தொடர்பாகவும் தகவல் இடம் பெற்றிருந்தது. அப்படித்தான் இந்த படத்துக்கான ஐடியா கிடைத்தது” என தெரிவித்தார்.