தருமபுரி மாவட்டத்தில் மருமகனுடனான கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னுடைய கணவரை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் தருமபுரி மாவட்டத்தையே அலற வைத்திருக்கிறது.
அங்குள்ள எரங்காட்டு கொட்டாய் என்ற பகுதியில் ஆறுமுகம் என்பவர் தனது மனைவி ஜோதி, 2 மகள்கள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். ஆறுமுகம் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த ஜனவரி 7ம் தேதி வழக்கம்போல மெடிக்கலுக்கு ஆறுமுகம் வேலைக்கு சென்றார். ஆனால் அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன ஜோதி ஜனவரி 9ம் தேதி தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஆறுமுகத்தை தேடி வந்தனர்.
இதற்கிடையில் மதிகோன்பாளையம் அருகே இருக்கும் தூதரையான் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரி டவுன் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்ததில் அது காணாமல் போன ஆறுமுகம் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) மாலை 6 மணிக்கு ஆறுமுகம் உடல் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆறுமுகம் தலையில் நிறைய வெட்டுக் காயங்கள் இருக்கிறது. அதன்மூலம் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மர்ம மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் மனைவி ஜோதி, மருமகன் சீதா ராமன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜோதி, சீதா ராமன் உள்ளிட்ட 6 பேருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிப்பட்டது.
அதாவது சீதாராமன் ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அதேசமயம் அவருக்கு ஆறுமுகம் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த சீதாராமன் மனைவி சண்டை போட்டு விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர். இதற்கிடையில் ஜோதியிடம் உன் மூத்த மகளை எனக்கு திருமணம் செய்துக் கொடு என சீதா ராமன் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி தொடர்பை கைவிட மனமில்லாத ஜோதி கடந்த 6 மாதத்திற்கு முன் சீதாராமனுக்கு தனது மூத்த மகளை திருமணம் செய்து வைத்தார். தொடர்ந்து ஜோதியுடனும் தொடர்பை வளர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆறுமுகத்திற்கு தன்னுடைய மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிய வர அவர் ஜோதியை கண்டித்துள்ளார். இதனால் தங்கள் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ஆறுமுகத்தை கொலை செய்ய ஜோதி, சீதா ராமன் இருவரும் திட்டமிட்டனர்.
அதன்படி ஜனவரி 7ம் தேதி வேலைக்கு சென்ற ஆறுமுகத்தை சீதாராமன் தனது 4 நண்பர்கள் உடன் கடத்தி கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைய உடலை ஏரியில் வீசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோதி, சீதா ராமன், சரவணன், ஜெய்சங்கர், பிரவீன்குமார், முருகன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
