திரௌபதி ரிலீசாகும் வரைக்கும் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என இயக்குநர் மோகன் ஜி பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் “காடுவெட்டி” என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீசாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது. இப்படம் பாமக கட்சியின் முக்கிய வேராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.
இதனிடையே இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, “காடுவெட்டி படக்குழுவினரை பாராட்ட வெவ்வேறு ஊரில் இருந்து வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். படத்தின் வெற்றி இந்த நிகழ்ச்சியிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. அனைவரும் கொண்டாடத்தான் போகிறீர்கள். பல தடைகளை தாண்டி தான் மறுமலர்ச்சி படம் வெளியானது. அப்போதும் உங்களுடன் காடுவெட்டி குரு அண்ணன் உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். ஆனால் என்னுடைய திரௌபதி படம் வெளியாகும்போது தனியாளாக சென்சார் போர்டிடம் போராடினேன். மக்களிடம் நிதி பெற்று உருவான அந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகும் வரைக்கும் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
அதனை புத்தகமாக எழுதினால் கூட பத்தாது. அப்படம் வெளியான பிறகு கிடைத்த ரிசல்ட் என்பது வேறு. அந்த மாதிரி மறுமலர்ச்சி, திரௌபதி படத்துக்கு பிறகு வட தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய வெற்றியை காடுவெட்டி படம் பெறும். அந்த வெற்றியை நீங்கள் எளிதாக அடைந்து விட முடியாது. இப்போது தான் இசை வெளியீட்டு விழா வரை வந்துள்ளீர்கள். யூட்யூப்பில் கண்டிப்பாக சென்சார் இல்லாத ட்ரெய்லர் என்பது வரும்.
சென்சாரில் கட் பண்ணப்பட்ட காட்சிகள் ட்ரெய்லரில் வரும். அதில் வரும் பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்வதை பொறுத்து தான் இந்த படம் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற போகிறது என்பது தெரியும். ரசிகர்களை நம்பி தான் தைரியமாக கதை எழுதுகிறோம். எங்களை எல்லாம் சினிமாவில் கூப்பிட்டு அவார்ட்டா கொடுக்க போகிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட கூட மாட்டார்கள். ஆனால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது தெரியும்.
இதைதான் இயக்குநர் சோலை ஆறுமுகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு மினிமம் கியாரண்டி படமாக இருந்தாலும் ஒரு பெரிய ஹீரோவுக்கு இருக்கும் ஓப்பனிங் இருக்கும். சினிமாவில் இன்றைக்கு இருக்கும் வறட்சியை காடுவெட்டி படம் தீர்த்து வைக்கும். காடுவெட்டி பெயர் வைத்து விட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் படம் தான் தர முடியும். அவரை பின்பற்றி வருகிறவர்கள் பெண்களுக்கான விழிப்புணர்வு தரும் படம் தான் எடுப்பார்கள். அதைத்தான் காடுவெட்டி குரு எங்களுக்கு சொல்லி கொடுத்துள்ளார்கள். நிச்சயம் இந்த படம் பெரிய விழிப்புணர்வாக அமையும்” என தெரிவித்தார்.