தமிழ் சினிமாவில் சில வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மோகன்.ஜி (Mohan G). திரௌபதி, பகாசுரன், ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகன்.ஜி, பா.ரஞ்சித்தை விமர்சித்துப் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 

பா.ரஞ்சித்தின் சிரிப்பு


'அட்டக்கத்தி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இன்று திகழ்பவர் பா. ரஞ்சித் (Pa.Ranjith). அவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்த படங்கள் என்றால் அது கார்த்தி நடித்த மெட்ராஸ்  மற்றும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' மற்றும் 'காலா' திரைப்படங்கள். கபாலி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. ஆனால் காலா திரைப்படம் அந்த அளவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 

 

இந்நிலையில் சமீபத்தில் பி.கே. ரோஸி திரைப்பட விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பா. ரஞ்சித்திடம் மலையாள இயக்குநர் பிஜூ கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். "நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலித் அரசியலை பேசி இருந்தீர்கள். அது அவருக்கு புரிந்ததா என எனக்குத் தெரியவில்லை" என அவர் கேட்ட கேள்விக்கு பா.ரஞ்சித் சிரித்தார். அந்த அரங்கில் இருப்பவர்களும் அதற்கு கைதட்டி சிரித்தார்கள். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

மோகன்.ஜி காட்டம்


இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து தற்போது மோகன்.ஜி பேசியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய மோகன். ஜி “அந்த ஏணிப்படியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னேறியுள்ளவர் நீங்கள். ஆனால் ரஜினிகாந்துக்கு தலித் அரசியல் தெரியாது என நக்கலும் நையாண்டியுமாக விமர்சனம் செய்தது அவரின் நன்றி இல்லாத போக்கை காட்டுகிறது. அதை பார்க்கும் போது மனதுக்கு வருத்தமாக இருந்தது. அன்று அவர் இல்லை என்றால் இன்று உங்களால் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியுமா? உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டார். 

‘ரஜினிகாந்த் ஆன்மீகவாதி’


நடிகர் ரஜினிகாந்துக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை விரும்பாதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். அவர் ஒரு சிறந்த மனிதர், ஆன்மீகவாதி. சமீப காலமாக தான் அவரை பற்றி சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவரை கிண்டல் செய்வதன் மூலம் என்ன பெருசாக சாதிக்க போகிறீர்கள்? 

 

பழைய வண்ணாரப்பேட்டை படம் எனக்கு சரியாக போகாததால் 'திரௌபதி' படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி சார் அப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தார். அவருக்கு நான் என்றுமே நன்றியுடன் இருப்பேன். எந்த மேடையானாலும் அவருக்கு நன்றி சொல்ல நான் மறந்ததே இல்லை. அவரால் தான் நான் இந்த இடத்துக்கு வந்தேன். நான் அவருக்கு நன்றியுடன் இருக்கும் போது நீங்க ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றியுடன் இருக்காமல் இருக்கீங்க. அது தான் உங்கள் சுபாவம்.

 





சினிமாவில் தயவு செய்து அப்படி இருக்காதீங்க அது ரொம்ப தப்பு. அவர் இல்லைனா நீங்க ஒன்னுமே இல்லை. இந்த இடத்துக்கு வந்து இருக்கவே முடியாது” என மிகவும் காட்டமாக இயக்குநர் மோகன். ஜி பா.ரஞ்சித்தை விமர்சித்துப் பேசியுள்ளார்.