தமிழ் சினிமாவின் வளரும் இயக்குநர்களில் ஒருவரான மோகன் ஜி தனது முதல் படம் உருவானது எப்படி என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனைத் தவிர  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிப்ரவரி மாதம் இந்த படம் ரிலீசாக உள்ளது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு பிரஜின், அஸ்மிதா  நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற “உன்னைத்தான் நினைக்கியில” பாடல் அனைவரையும் கவர்ந்து படமும் கவனம் பெற்று பாராட்டை பெற்றது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் தனது முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை உருவான கதையை பற்றி தெரிவித்துள்ளார். 


அதில், “பழைய வண்ணாரப்பேட்டை படம் பண்றப்ப எனக்கு 25 வயசு தான். விஜய் ஆண்டனி மனைவி ஃபாத்திமாவால் தான் சினிமாவுக்கு வந்தேன். அவங்க தான் எனக்கு முன்மாதிரி. ஃபாத்திமா சேனல் தொகுப்பாளரா இருக்குறப்ப நான் அவங்கக்கூட போய் தான் சினிமா பத்தி கத்துகிட்டேன். 






ஃபாத்திமா விஜய் ஆண்டனியை கல்யாணம் பண்ன அப்புறம், விஜய் தான் எனக்கு டெக்னீக்கலா நிறைய விஷயம் சொல்லிக் கொடுத்தாரு. யாரிடமும் உதவி இயக்குநரா வேலை பார்க்கல. மத்தவங்க மாதிரி இல்லாம, 2 பாட்டு, கதைக்களம் என அனைத்தையும் ரெடி பண்ணிட்டு தான் போய் தயாரிப்பாளர்களை பார்த்தேன். 


என்னோட பழைய படத்தோட டைட்டிலே பேப்பர்ல வந்த செய்தி  மற்றும் என் வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சி தான் தேர்ந்தெடுத்தேன். அந்த நேரம் பதவியேற்பு முடிச்சிட்டு போன எம்.எல்.ஏ. ஒருத்தர் திருச்சி பக்கத்துல விபத்துல இறந்து போனாரு. அந்த மரணம் பற்றி நிறைய வதந்திகள் வந்துச்சி. சிசிடிவி கேமராவுல ரெக்கார்ட் ஆகல. அதேசமயம் நான் என் நண்பர்களுடன் ரோட்டு கடையில சாப்பிட்டு கொண்டிருந்தேன்.


அப்போது அங்கிருந்த 2 பேருக்குள்ள சண்டை வந்து, அதுல ஒருத்தர் கடையில இருந்த கத்தியை எடுத்து இன்னொருத்தரை குத்தி கொன்னுட்டாரு. தப்பு பண்ணவன் ஓடி போய்ட்டான். ஆனால் அங்க இருந்த எல்லோரையும் இரவு 2 மணிக்கு போலீசார் கைது பண்ணிட்டாங்க. கிட்டதட்ட 37 மணி நேரம் வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல விசாரணைக்கு கூப்பிட்டு போய்ட்டாங்க. அதை வச்சி தான் பழைய வண்ணாரப்பேட்டை படத்துல காட்சிகள் வச்சிருப்பேன்” என அந்த நேர்காணலில் மோகன் ஜி கூறியுள்ளார்.