திரௌபதி 2 படத்தில் 1300 சிஜி காட்சிகள் உள்ளது என்றும், இப்படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படமானது ஜனவரி 23ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் பரணி, ரக்ஷனா இந்துசூடன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, திரௌபதி 2 படம் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றி பேசியுள்ளார். அதில், “நிஜமாகவே பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சங்கடமான விஷயமாகவே நான் பார்க்கிறேன். நாங்கள் முன்னதாக 2026 ஜனவரி 23ம் தேதி திரௌபதி 2 படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்திருந்தோம். திடீரென அஜித்தின் மங்காத்தா படம் ரீ-ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் இரண்டு பேரின் படங்கள் (அஜித் - ரிச்சர்ட் ரிஷி) ரிலீஸாகி பிரச்னை ஆக வேண்டும் என நினைத்து ஜனவரி 30ம் தேதிக்கு தள்ளி வைக்க நினைத்தோம்.
ஆனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஒருவேளை ஜனவரி 23, 30 தேதியில் திரௌபதி 2 படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. பிப்ரவரி எல்.ஐ.கே படம் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலும் வந்து விட்டால் சிக்கலாகி விடும் என்பதால் பொங்கல் ஸ்லாட் காலியாகவும் ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம். ஆனால் கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கல் என ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக தியேட்டர் ஸ்கிரீன்கள் ஹீரோக்கள் அடிப்படையில் பிரிக்கப்படும் என்பதால் நிச்சயம் திரௌபதி 2 படத்துக்கு ஸ்கிரீன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். காரணம் இப்படம் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ரிஸ்கை சமாளிக்க, போட்ட முதலீட்டை மீட்டெடுக்க ஜனவரி 23ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்து விட்டோம். திரௌபதி படத்தின் 2ம் பாகம் தான் இப்படம். அந்த படம் 17 நாட்களில் ரூ.18 கோடி வசூலை ஈட்டியது. ஆனால் 18வது கொரோனா ஊரடங்கு வந்து விட்டது. இல்லாவிட்டால் அப்படம் ரூ.25 கோடி வசூலை ஈட்டியிருக்கும். அந்த படம் வெறும் ரூ.45 லட்சத்தில் உருவானது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழ் தவிர மற்ற 4 மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதால் தயாரிப்பாளர் இவ்வளவு கோடியை முதலீடு செய்துள்ளார். திரௌபதி 2 படம் 31 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் செய்யப்பட்டது. அவதார் 2 படமும் 31 நாட்கள் தான் ஷூட்டிங் நடந்தது. ஆனால் அப்படம் உலகம் முழுக்க ரூ.50 ஆயிரம் கோடி வசூலை பெற்றது. ஒரு வருடம் அந்த படத்துக்கு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்தது. அந்த மாதிரி பிளான் பண்ணினால் ரூ.12 கோடி பட்ஜெட்டில் ஒரு வரலாற்று படம் பண்ணி விடலாம். இந்த படத்தில் 1300 சிஜி காட்சிகள் உள்ளது. ட்ரெய்லரில் 62 சிஜி காட்சிகள் உள்ளது. தியேட்டரில் திருப்திகரமாக காட்சிகள் கொண்ட படமாக திரௌபதி 2 இருக்கும் என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.