மக்களுடன் இருப்பவர்களே ஓட்டு போடுவார்கள் என இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல்
2024 -2026 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் இயக்குநர் பிரிவில் செயற்குழு உறுப்பினர்களுக்கான 10 இடங்களுக்கும், உதவி இயக்குநர் செயற்குழு உறுப்பினர்களுக்கான பிரிவில் 7 இடங்களுக்கும், இதே பிரிவில் இணைச் செயலாளர்களின் 2 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
முன்னதாக ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர், செயலாளர், என மொத்தம் 27 பதவிகளை கொண்ட தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 1 அம் தேதி நிறைவடைந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார், செயலாளராக பேரரசு, பொருளாளராக சரண், துணைத்தலைவர்களாக அரவிந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணைச்செயலாளர்களாக சுந்தர் சி, எழில், ஏ. வெங்கடேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
விளாசிய மோகன் ஜி
இதனிடையே இந்த தேர்தலில் தனது வாக்கினை மோகன் ஜி பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஒரு சில பெரிய இயக்குநர்களை தவிர முன்னணி இயக்குநர்கள் பலரும் வாக்களிக்க வரவில்லையே.. ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அது தமிழ்நாட்டிற்கே உண்டான பாரம்பரியம். முன்னணியில் இருப்பவர்கள், வளர்ந்தவர்கள் என யாரும் ஓட்டு போட வர மாட்டார்கள். மக்களுடன் இருப்பவர்களே ஓட்டு போடுவார்கள். கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும். சினிமாவில் ஆயிரம் உரிமை பேசி என்ன பிரயோஜனம்? - ஒவ்வொரு தேர்தலிலும் நம்ம உரிமையை காட்ட வேண்டும்” என தெரிவித்தார்.
இயக்குநர்கள் வர வேண்டும்
தொடர்ந்து சங்கத்துக்கு நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “இயக்குநர் சங்கம் ரொம்ப ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மிகப்பெரிய போட்டி ஒன்றை நடத்தி சர்வதேச அளவில் இயக்குநர்களை உருவாக்கினார்கள். அதை தொடர்ந்து செய்ய வேண்டும். வருடா வருடம் எங்கள் இயக்குநர் சங்கத்தில் இருந்து புதுப்புது இயக்குநர்களை உருவாக்க வேண்டும். அதற்காக பயிற்சி பட்டறை அமைத்து பட்ஜெட்டில் படம் எடுப்பதை சொல்லி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்” என மோகன் ஜி பதிலளித்தார்.
ஓட்டு போட வேண்டும் என மோகன் ஜி தெரிவித்திருப்பது நிச்சயம் திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் மறக்காமல் தங்கள் வாக்கினை செலுத்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி தொடர்ந்து திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட 4 படங்களை இதுவரை இயக்கியுள்ளார்.தனது அடுத்தப்பட அறிவிப்பை மே மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Kaaduvetti Movie Review: ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி நடுநாட்டுக்கதை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ