குழந்தை நட்சத்திரமாக 80ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவராக இருந்தவர் மாஸ்டர் சுரேஷ். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரின் சிறு வயது கேரக்டராக நடித்துள்ளார் மாஸ்டர் சுரேஷ். அதிலும் 'படிக்காதவன்' படத்தில் சிறு வயது ரஜினியாக தன்னுடைய உடல் மொழி, ஹேர் ஸ்டைல் என அனைத்திலும் ரஜினியை அப்படியே பிரதிபலித்த மாஸ்டர் சுரேஷை  அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. 


 




குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த நடிகர் மாஸ்டர் சுரேஷ் வளர்ந்த பிறகு திரைக்கு பின்னால் இருக்கவே அதிகம் விரும்பினார். நடிப்பை காட்டிலும் இயக்கத்தின் மீது தான் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சூரிய கிரண் என்ற பெயரில் படங்களை இயக்கி வந்தார். அந்த வகையில் தெலுங்கில் 'சத்தியம்' என்ற படத்தை இயக்கி இருந்தார். சுமந்த் - ஜெனிலியா நடித்த அப்படத்தை நடிகர் நாகர்ஜூனா தயாரித்து இருந்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதை தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறியது. 




அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தாலும் விடாமுயற்சியுடன் போராடி வந்தார். நடிகை வரலட்சுமி சரத்குமாரை வைத்து 'அரசி' என்ற பெயரில் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டு அதற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். மிகவும் தீவிரமாக அந்த வேலைகளில் ஈடுபட்டு வந்து போது தான் திடீரென இயக்குநர் சூர்யா கிரணுக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரிய கிரண் சிகிச்சை பலனின்றி மார்ச் 11ம் தேதியன்று உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை நட்சத்திரமாக 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். 


 







இயக்குநர் சூரிய கிரண் தங்கையும், நடிகையுமான சுஜிதா முதல் முறையாக தன்னுடைய அண்ணன் மறைவு குறித்து உருக்கமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அண்ணன் சூரிய கிரண் மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து "நிம்மதியாக ஓய்வெடுங்கள்... நீங்கள் என்னுடைய சகோதரன் மட்டுமல்ல என்னுடைய தந்தையும், ஹீரோவுமாக இருந்தீர்கள். உங்களின் திறமை மற்றும் பேச்சாற்றலை நான் என்றுமே பாராட்டுவேன். உங்களின்  அன்பை பல வகையிலும் என்னை வந்து அடைந்துள்ளது. மறுபிறவி என்று ஒன்று இருந்தால் அப்போது உங்கள் கனவுகள் மற்றும் சாதனைகள் அனைத்தும் புதிதாக தொடரட்டும்" என மிகவும் உருக்கமாக அண்ணனின் நினைவலைகளை பகிர்ந்து இருந்தார் நடிகை சுஜிதா. அவரின் இந்த போஸ்டுக்கு பலரும் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.