செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படத்தை பற்றி சினிமா விமர்சகரும், ஊடகவியலாளருமான ஆனந்தன் தெரிவித்த கருத்துக்கு, படத்தின் இயக்குநர் மோகன் ஜி சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார். 


பகாசூரன்


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத்தவிர  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர். 


இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், மோகன் ஜியின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பகாசூரன் படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில், படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. 






பரபரப்பை ஏற்படுத்திய ட்ரெய்லர்


சர்ச்சையான வசனங்கள் அடங்கிய இந்த ட்ரெய்லர் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குநர் மோகன் ஜி, தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில்  வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்? என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நிறைய உண்மை சம்பவங்கள் இருக்கிறது என தெரிவித்து இருந்தார். இதனால் பகாசூரன் படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 


இதற்கிடையில் பகாசூரன் படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவுள்ளது. அண்ணன் செல்வராகவன் - தம்பி தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


டென்ஷனான மோகன் ஜி 


இதனிடையே யூட்யூப் தளம் ஒன்றிற்கு சினிமா விமர்சகரும், ஊடகவியலாளருமான ஆனந்தன் நேர்காணல் அளித்திருந்தார். அப்போது அவரிடம் வாத்தி - பகாசூரன் படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வாத்தி என்ன மாதிரியான படம்.. எவ்வளவு பட்ஜெட்.. அதுகூட மோதுதுன்னு ஒரு படத்தோட பெயரை சொல்றீங்களே.. இது  நியாயமா இருக்கா... மோகன் ஜியோட சினிமா வரலாறு என்ன?... இதுக்கு முன்னாடி எடுத்த படங்கள்ல என்ன தரம் இருந்துச்சி.. அதெல்லாம் நாம பார்க்கணும். அதனால் போட்டி என்ற வார்த்தையை எனக்கு பயன்படுத்த கூசுகிறது என தெரிவித்திருந்தார். 






இதனைக் கண்டு இயக்குநர் மோகன் ஜி கடுப்பாகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் சார்.. நீங்க #பகாசூரன் படத்தை பற்றி பேசவே வேணாம் சார்..அதான் நல்லது.. ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க சார்.. நாங்க போட்டி போடுற அளவுக்கு பெரிய பட்ஜெட் இல்ல தான் சார்.. ஆனா நிச்சயம் பேசப்படுவோம்.. இன்னும் 17 நாள் தான் சார் இருக்கு.. பாருங்க.. என தெரிவித்துள்ளார்.