ஹீரோவுக்காக காத்திருக்கும் இயக்குநர் நான் கிடையாது என இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
திரௌபதி 2 படம்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி-யின் 5வது படமாக திரௌபதி 2 உருவாகியுள்ளது. வரலாற்றில் நடைபெற்ற உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, ரக்ஷனா இந்துசூடன், வேலராமமூர்த்தி என பலரும் நடித்துள்ளனர். திரௌபதி 2 படம் ஜனவரி 23ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் இப்படம் தொடர்பாக நேர்காணல்களில் இயக்குநர் மோகன் ஜி பங்கேற்று வருகிறார்.
டென்ஷனான மோகன் ஜி
அதில் ஒரு நேர்காணலில், “வன்னிய சமூக மக்களை பாஜவுக்கு, இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக கொண்டு வரும் வேலையை மோகன் ஜியை வைத்துச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “இந்த கேள்விக்கு என்னால் அவதூறு வழக்கு போட முடியும். ஆதாரம் இல்லாமல் இப்படி சொல்ல முடியாது. இது ரொம்ப கடினமான கேள்வி. ஒரு சமுதாய மக்களை நான் விற்க போகிறேன் என்பது சாதாரணமானது கிடையாது. அவ்வளவு பெரிய கூட்டத்தை நான் திசை திருப்புகிறேன் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வெளியில் என்னைப் பற்றி விமர்சனம் வைப்பவர்கள் குறித்து நான் கவலைப்படவில்லை.
என் சமுதாய மக்களை பயன்படுத்தி நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அரசியல் அல்லது அந்த சமுதாயத்தின் தலைவராக நின்றிருக்க முடியும். என்னுடைய மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு படத்துக்காக ஒரு வருடம் மும்பையில் போய் கஷ்டப்பட்டு ஷூட்டிங் நடத்தி அதை வைத்து சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.
நான் என் சமுதாய மக்கள் ஒவ்வொருவரிடமும் மாதம் ரூ.100 கொடுங்கள் கேட்டால் கொடுப்பார்கள். அதேசமயம் திரௌபதி படத்துக்குப் பின் நான் மக்களிடம் பணம் பெற்று எந்த படமும் இயக்கவில்லை. எப்படி என்னை சாதியை பயன்படுத்தி சம்பாதிக்கிறீர்கள் என சொல்ல முடியும்.
ஒரு பெரிய உச்ச நடிகருக்கே என்னுடன் வேலை பார்க்க ஆசை இருக்கு. ஆனால் தயக்கப்படுகிறார். என் மீது ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதை வைத்தே வாழ்ந்து கொள்கிறேன். என்னால் முடிந்ததை மக்களுக்கு சொல்கிறேன். எனக்கு சொந்த வீடு இருக்கு. 4 கடைகள் வாடகைக்கு விட்டு பிழைக்கிறேன். எல்லா படமும் கடைசிப் படம் என நினைத்து தான் பண்ணுகிறேன்.
சினிமாவை மட்டும் நம்பி நான் இல்லை. ஹீரோவுக்காக காத்திருக்கும் இயக்குநர் நான் கிடையாது. மக்களை நம்பும் எனக்கு எந்த கவலையும் இல்லை. எல்லாருக்குமான படமாக திரௌபதி 2 படம் இருக்கும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இந்த படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் வைக்கலாம்” என மோகன் ஜி கூறியுள்ளார்.