தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது, பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்டுத்தியுள்ளது. நேற்றே அதிரடியாக விலை உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து, வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளியும் போட்டி போட்டு விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று ஓய்வு அளித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலையை பார்க்கலாம்.

புதிய வரலாற்று உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை பொங்கல் பண்டிகை நாளான 15-ம் தேதி, விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,290 என்ற உச்ச விலையையும், ஒரு சவரன் தங்கம் வரலாற்று உச்ச விலையாக, 1,06,320 ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்து, 16-ம் தேதி கிராமிற்கு 60 ரூபாய் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,05,840 ருபாய்க்கும் விற்கப்பட்டது.

பின்னர், வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 17-ம் தேதி மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்று, ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 18-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 19-ம் தேதி மேலும் அதிரடியாக விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் 13,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,07,600 ரூபாயாகவும் எகிறிது.

இந்த சூழலில், 20-ம் தேதியான நேற்று ஒரே நாளில், தங்கத்தின் வலை 3,600 ரூபாய் அதிகரித்து பேரதிர்ச்சி அளித்தது. காலையில் சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,08,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 160 ரூபாய் விலை உயர்ந்து 13,610 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இந்நிலையில், மாலையில் அதிரடியாக கிராமிற்கு மேலும் 290 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 2,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்வு

இந்த சூழலில், இன்று காலையிலேயே சவரனுக்கு மேலும் 2,800 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 350 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்தை கடந்து, 14,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று விலை உயர்வுக்கு ஓய்வளித்த வெள்ளி

மறுபுறம், சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக வெள்ளி விலை இன்று உயரவில்லை. சென்ற வாரத்தின் இறுதியில் கிராம் 310 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, இந்த வாரத்தில் தொடக்க நாளில், அதாவது 19-ம் தேதி 8 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளியின் விலை 20-ம் தேதியான நேற்று காலையில் கிராமிற்கு 12 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், மாலையில் கிராமிற்கு மேலும் 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 340 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த சூழலில், இன்று விலை உயர்வின்றி, அதே விலையில் நீடிக்கிறது.

தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் 7,000 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது, பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.