இயக்குனர் மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில் கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் குறித்த தனது கருத்தினை பதிவு செயுதுள்ளார்.  


மாமன்னன்:


தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற, தென் மாவட்டத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களைப் பற்றிய திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பரியேறும் பெருமாள் திரைப்படம் கோவா திரைப்படவிழாவில் சிறந்த திரப்படத்திற்கான விருதினைப் பெற்றது. 


இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகி தற்போது திரைக்கு வரவுள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது.


அப்போது மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ். நான் இதற்கு முன்னர் இயக்கிய இரண்டு படங்கள் தொடங்குவதற்கு முன்னர், தேவர் மகன் திரைப்படம் பார்த்துவிட்டுத்தான் தொடங்கினேன் என குறிப்பிட்டு இருந்தார். ‘மாமன்னன்’ உருவாவதற்கு ‘தேவர் மகன்’தான் காரணம் என்றும் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார். தேவர் மகனில் நடித்த இசக்கி கதாபாத்திரம்தான் மாமன்னன் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டார். மாரி செல்வராஜ் பேசியது இணையத்தில் வைரலாகிய நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன. 



காலத்தால் அழியாத காவியம்:


இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில், ”தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம்” என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் இயக்குநர் மாரி செல்வராஜை வம்புக்கு இழுப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 


ஆனால், தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன்,”அந்த படத்துக்கு தேவர் மகன் என பெயர், ”போற்றிப்பாடாடி” பாடல் ஆகியவை தென் தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என நாங்கள் அப்போது யோசிக்கவில்லை. இந்த பாடலுக்காக நானும் இசையமைப்பாளர் இளையராஜாவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இப்போது அந்த படத்தினை எடுத்தால் கூட அந்த பெயர் வைக்க மாட்டோம்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.