தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் பார்த்து அப்படத்தின் இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹரின் அம்மா, சகோதரி இருவரும் நெகிழ்ச்சியுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் ஆடுகளம், படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். 






கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று முன்தினம் முதலே தியேட்டர்கள் திருவிழாகோலம் பூண்ட நிலையில் நேற்று படம் பார்த்த ரசிகர்கள் பலரும் திருச்சிற்றம்பலம் படத்தில்  படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி  பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறினர். குறிப்பாக தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒரு தோழி நமக்கில்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்துள்ளது. 


இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹரின் அம்மாவும்,சகோதரியும் இருவரும் நேற்று படம் பார்த்தனர். பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய அவரது சகோதரி, என் அண்ணன் மித்ரன் ஜவஹர் - தனுஷ் காம்பினேஷனில் இது 4வது படம். எல்லாரும் கைத்தட்டி கொண்டாடும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. பேமிலியோடு போய் என்ஜாய் பண்ணலாம் என குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய மித்ரனின் அம்மா, சின்ன வயதில் இருந்தே தனுஷை எங்களுக்கு தெரியும். அவங்க எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரி. என் பிள்ளை கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான். அல்லா தான் என் பிள்ளையை காப்பாத்தணும். படத்தை பார்க்கும் போது எனக்கு அழுகையா வந்துடுச்சி என கண் கலங்கிக் கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.