இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். இவரது உடல் தற்போது சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முத்துவின் உடலுக்கு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றன. இவருக்கு மனைவி பாக்கியலட்சுமியும், அகிலன், ஐஸ்வர்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.


என்ன நடந்தது..? 


இன்று காலை இயக்குநர் மாரிமுத்து தனது சக நடிகரான கமலேஷுடன் இணைந்து 'எதிர் நீச்சல்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் மயங்கி விழுந்தார். அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


தற்போது அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் இன்று அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன.


மாரிமுத்துவின் சீரியல் டயலாக் உண்மையான சோகம்: 






எதிர்நீச்சல் சீரியலில் இயக்குநர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,  கடந்த மாதம் ஒளிபரப்பான எபிசோடு ஒன்றில் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆதி குணசேகரன் ஒரு கை செயல்படவில்லை என சொல்லி குடும்பத்தினரிடம் நடித்து நம்ப வைப்பார். அதேநேரத்தில், தனது குடும்ப சொத்துக்கள் பறிபோன பதற்றத்தில் இருக்கும் ஆதி குணசேகரன் தன் தம்பியிடம், ‘நெஞ்சில் கை வைத்து வலி வந்து அப்பப்ப ஒரு மாதிரி அழுத்துதுப்பா. அந்த வலி உடம்புல வர்றதா, மனசுல வர்றதான்னு தெரியல, அப்பப்ப வலி வந்து எச்சரிக்கை பண்ணுதுன்னு தோணுது, ஏதோ கெட்டது நடக்கப்போகுதுன்னு தோணுதுப்பா, அதுதான் நெஞ்சுவலி மாறி வந்து எனக்கு காட்டுது” என வசனம் பேசியிருப்பார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.