தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர்  தனுஷ் தற்போது இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார். பா. பாண்டி படத்தை தொடர்ந்து தன்னுடைய 50வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இன்று திரையரங்கில் வெளியான 'ராயன்' படம் முதல் நாளே பட்டையை கிளப்பி வருகிறது. சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பலமுறை, எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்து வருகிறது. 

படம் வெளியாவதற்கு முன்னரே ப்ரீ புக்கிங் விற்பனையே தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடியை வசூல் செய்ய உலகளவில் 6 கோடி வரை ப்ரீ புக்கிங் டிக்கெட் விற்பனையானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' படம் முதல் நாள் ஓப்பனிங் அன்றே 10.50 கோடி வசூல் செய்தது. 'ராயன்' படம் தற்போது அந்த சாதனையையும் முறியடித்து தனுஷ் திரை பயணத்தில் இது மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரை ரசிகர்கள் தனுஷின் ராயன் படத்தை கொண்டாடி வரும் அதே வேலையில் பல திரை பிரபலங்களும் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து தனுஷை வாழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் பார்த்துவிட்டு படம் குறித்த தனது விமர்சனத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். 

"ராயன் ஒரு அற்புதமான அனுபவம்!! வாழ்த்துக்கள் தனுஷ் சார். நடிகராக 50வது படமும் உங்களின் இயக்கமும் அற்புதம். கலை வடிவத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!! உங்களை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு! ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் சியர்ஸ்! " என பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ்.