தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பானுமதி (74).  வயதான இவர் சென்னை ஐடிஐ மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு திடீரென வந்த அழைப்பில் "மும்பை காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார், இதனை நம்பிய அவர் என்னவென்று கேட்டுள்ளார். அப்போது உங்களது ஆதார் எண் மூலம் சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது. அந்த சிம் உடன் இணைக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணில் இருந்து பலருக்கு ஆபாசப் படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட மும்பை கனரா வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் ஹவாலா பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்று கூறிய நபர் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த பேரில் உங்களுக்கும் இதில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம் என்று கூறியிருக்கிறார். 


மேலும் பானுமதியை தனி அறையில் இருக்கச் சொல்லி வெளி நபர் யாரையும் தொடர்புக் கொள்ளக்கூடாது என மிரட்டியதோடு வங்கி கணக்கு எண் ஒன்றை அனுப்பி அதில் பணம் அனுப்பச் சொல்லியிருக்கின்றனர். அதன்படி மிரட்டலுக்கு பயந்து 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பானுமதி அனுப்பியதாக தெரிகிறது. அதன்பின்னர் இது தொடர்பாக பானுமதி தேனி சைபர்  கிரைம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர்  தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் டெல்லியில் இருப்பதை  அறிந்த போலீசார் டெல்லி சென்று அபிஜித்சிங் (36) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து  44 ஆயிரம் ரொக்கப்பணம்,  5 செல்போன்கள், 1 லேப்டாப், 103 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 28 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவரை தேனி அழைத்து வந்த போலீசார் இது போல் இவர் தமிழகத்தில் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? இவருடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 


டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாக முதிய பெண்மணி ஒருவரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நபரை தேனி சைபர் கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கையின் மூலம் டெல்லி வரை சென்று கைது செய்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.