அம்பேத்கரின் கனவுகளை தான் படமாக எடுத்துக் கொண்டு இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்ற, தாழ்வுகளை பற்றி பேசிய அப்படம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாரி செல்வராஜ் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன், உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என 3 படங்களை இயக்கியுள்ளார்.
தொடர்ந்து வாழை, துருவ் விக்ரம் படம் என பிஸியாக சுழன்று கொண்டிருக்கும் மாரி செல்வராஜ், தன் வாழ்க்கையில் நடந்த, தன்னை பாதித்த சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு படம் இயக்கி வருகிறார். ஆனால் அவர் மீது தொடர்ச்சியாக சாதிய ரீதியிலான படம் இயக்குபவர் என்ற முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இதற்கு தன் படங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.
இதனிடையே இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி தொடர்பான உறுதிமொழிகளையும் எடுத்துக் கொண்டனர்.
இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மாரி செல்வராஜிடம், “அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு இந்த தலைமுறையில் எடுக்க முடியுமா?” என சிறுமி ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே வந்திருக்கிறது. அவரின் வாழ்க்கை பற்றி எல்லாருக்கும் தெரியும். அதை எடுக்க வேண்டும் என அவசியமே இல்லை. அம்பேத்கரின் கனவுகள் இருக்கும்ல, அதைத்தான் எல்லாரும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா வீடுகள், அரசு அலுவலகங்கள் என எல்லாவற்றிலும் அம்பேத்கர் வந்து விட்டார். ஆனால் ஏன் நம் ஊரில் அம்பேத்கர் கூண்டுக்குள் இருக்கிறார் என்ற கேள்வி இருக்குது. அந்த கதை முதலில் முடியட்டும். அவர் ஏன் கூண்டுக்குள் இருக்கிறார் என்பதற்காக தான் படம் பண்ணிக்கொண்டு இருக்கிறோம். அந்த கூண்டு என்றைக்கு திறக்கப்படுகிறதோ அப்போ வேறு கதை பிறக்கும்” என மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க: Rajini vs Kamal : ரஜினி - கமல் நேரடி போட்டி.. 2005ம் ஆண்டு இதே நாளில் வெளியான சந்திரமுகி - மும்பை எக்ஸ்பிரஸ்!