மாமன்னன் படம் உருவான கதையை  அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ள படம் “மாமன்னன்”.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. 


அந்நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் உருவான கதையை தெரிவித்தார். அவர் தனது உரையில், “பரியேறும் பெருமாள் படம் பார்த்த உதயநிதி என்னிடம் நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என சொன்னார். ஆனால் நான் தனுஷூடன் கர்ணன் படம் கமிட் ஆகி விட்டேன் என சொன்னேன். சரி என போய் விட்டார். தொடர்ந்து கர்ணன் ரிலீசானது திரும்பவும் கேட்டார். நான் துருவ் விக்ரம் உடன் படம் பண்ணப் போகிறேன் என சொன்னேன். எதுவும் சொல்லாமல் விட்டு விட்டார்.


அப்புறம் கடைசியாக ஒரு படம் பண்ண வேண்டும் என முடிவு செய்த பிறகு உதயநிதி எனக்கு போன் பண்ணி சொன்னார். நீங்க இயக்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என சொன்னேன். இவ்வளவு பெரிய ஆளு நம்மகிட்ட கேக்குறாரேன்னு சந்தோசமா இருந்துச்சு. உடனே இதனை பா.ரஞ்சித் கிட்ட சொன்னேன். அவர் என்னிடம் சரி நீ போய் கதையை சொல். நீ சொன்னா அவருக்கு பிடிக்குமான்னு தெரியல. எப்படியும் வேண்டாம்ன்னு தான் சொல்வாரு. நீ வந்துரலாம் என கூறிவிட்டார்.


உதயநிதிக்கு பிடிக்காது என நினைத்த கதை


நான் எனது நூலகத்தில் இருந்து உதயநிதிக்கு பிடிக்காது என நினைத்த கதையை அவருக்கு சொன்னேன். 20 நிமிடம் அதனைக் கேட்டவர் பண்ணலாம் என சொல்லிவிட்டார். நான் இப்படம் சாத்தியமாக வாய்ப்பில்லை என நினைத்த நிலையில், எப்படி இது நடந்துச்சுன்னு தெரியவில்லை என சொன்னேன். 


அதன்பிறகு மீண்டும் அவரிடம், இந்த படம் உருவாக இந்தந்த கேரக்டர்களில் இவர்கள் நடிக்க வேண்டும் என ஃபஹத் ஃபாசில், வடிவேலு பெயரை சொன்னேன். நீங்க 3 பேரும் நடிக்கும்போது அந்த படம் அதுக்கான நியாயத்தை சென்று அடையும் என சொன்னேன். நீங்க உதவி பண்ணுங்க. நான் பார்த்துகிறேன் என சொல்லி இருவரிடமும் கதை சொன்னேன். அவர்கள் ஓகே சொன்னவுடன் படம் மேல் நம்பிக்கை வந்து விட்டது. 


இதனையடுத்து ஹீரோயின் கேரக்டருக்கு யாரை போடலாம் என யோசித்தோம். என்னுடைய படங்களில் பெரிய அளவில் பிரபலமாகாத ஹீரோயினை நடிக்க வைப்பேன். அப்படித்தான் இதிலும் முடிவு செய்தேன். உடனே உதயநிதி 3 பெரிய தூண்கள் இருக்கும் போது, இப்படி சின்ன ஹீரோயின் சொன்னா எப்படி என கேட்டார். நான் உடனே கீர்த்தி சுரேஷ் மாதிரி ஒரு ஆள் பண்ணினால் நன்றாக இருக்கும் என சொன்னேன். உதயநிதியே பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்தார். 


அடுத்ததாக மியூசிக்கிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கிட்ட போலாமா என உதயநிதி கேட்டார். நான் ஷாக் ஆகி விட்டேன். முயற்சி பண்ணுவோம் என சொன்னார். ஜூம் காலில் தான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கதை சொன்னேன். உயிரே படத்தில் தான் தியேட்டரில் முதன்முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை பார்த்தேன். தைய..தையா பாடலை பாடிக்கொண்டு ஆடு, மாடு மேய்த்துள்ளேன். ஆனால் அவருடன் செலவிட்ட நாட்கள் மறக்க முடியாது என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.