Captain Miller PreRelease Event: கண்டிப்பாக தனுஷுடன் இணைந்து கர்ணனை விட பெருசா ஒரு படம் பண்ணுவேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 


தனுஷ் நடிப்பில் உருவான படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். 

 

மூன்று பாகங்களாக வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் என்பது உறுதி. 1930 முதல் 40 காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்றும், தனிமனிதனின் சுதந்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அருண் மாதேஸ்வரன்  தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன்  எப்படி போராளியாக மாறுகிறார் என்பதே இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்று அவர் தெரிவித்தார்.  

 

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற இயக்குநர் மாரி செல்வராஜ், “எல்லாருக்கும் வணக்கம். இது என்னோட பேம்லி நிகழ்ச்சி. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. தனுஷ் சார் பத்தி பேசிட்டே இருக்கு. கேப்டன் மில்லர் லுக் பார்த்து பயமா இருக்கு. கர்ணன் முடிச்சதும் இன்னொரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அதுக்குள்ள எனக்கு வேறு வேலைகள் வந்தது. அவரிடம் போய் கேட்டேன். எங்க வேண்டுமானாலும் போங்க. ஆனால் திரும்பி வர்றப்ப கர்ணனை விட பெருசா ஒரு படம் கொடுங்கண்ணு சொன்னாரு. கண்டிப்பா அப்படி ஒரு படமா அது இருக்கும்.

கேப்டன் மில்லர் பார்க்க பொறாமையா இருக்கு. நடிப்பில் வேட்டையாடி இருக்காரு தனுஷ். இதை பார்க்கும் போது கர்ணன் படத்துல நடிப்பில் முழு தீனி போடவில்லை என்பது புரிந்தது. அருண் கூட படம் பண்ண போறேன்னு தெரிஞ்சது சந்தோசமா இருந்தது. தூத்துக்குடியில் வெள்ளம் வந்தப்ப நான் உதவி பண்ண போனேன். அப்ப எனக்கு போன் பண்ணி சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்கன்னு பாராட்டினார் தனுஷ். அதை எப்பவும் நான் மறக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.