நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக மாரடைப்பு தொடர்பான மரணங்கள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. உணவு பழக்கம் முதல் பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் வயது வித்தியாசம் இல்லாமல் நடைபெறும் இத்தகைய மறைவுகளை யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. குறிப்பாக திரைத்துறையில் கடந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட முன்னணி மற்றும் இளம் பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி காலமானார். தமிழில் அழகி, தென்றல், தாண்டவக்கோனே உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் அரசியலில் கொண்ட ஈடுபாடு காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அருள்மணி செயல்பட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் பயிற்சி உள்ளிட்ட பல வகைகளில் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டிருந்தார். 10 நாட்களாக பரப்புரைக்காக வெளியூர் சென்றிருந்த அவர் சென்னை திரும்பி தனது வீட்டில் ஓய்வில் இருந்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் அருள்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டும் அது பலனளிக்காமல் அருள்மணி இரவு 9.30 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருள்மணி மறைவு அரசியல் மற்றும் சினிமாவுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.