நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து கடிதம் எழுதியது ஏன் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்து சுரேஷ், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அது தேவர் மகன் படத்தைப் பற்றியும், அதில் நடித்த கமலைப் பற்றியும் மிகவும் காட்டமாக மாரி செல்வராஜ் விமர்சித்த கடிதம். இப்படி பேசிய மாரி செல்வராஜா, மாமன்னன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் முன்பு, மாமன்னன் படம் உருவாக காரணம் தேவர் மகன் என பேசினார் என இணையத்தில் தாறுமாறாக விமர்சனங்கள் எழுந்தது. இப்படியான நிலையில் சர்ச்சைகள் தொடர்பாக மாரி செல்வராஜ் நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், “தேவர்மகன் இசக்கி தான் மாமன்னன் படம் என நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் என நினைக்கிறேன். இரண்டு படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு இந்த படத்தில் இந்த கேரக்டரை வடிவேலு பண்ணுனா எப்படி இருக்கும் என நினைத்தேன். அந்த தாக்கம் தான் வடிவேலுவை நடிக்க வைத்தது என யோசித்தேன். மற்றபடி தேவர் மகனுக்கும், மாமன்னுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில எமோஷனலாக இருந்தேன். கமல் மாதிரி ஒரு லெஜண்ட் படத்தை பார்த்து விட்டார். நான் எவ்வளவு எமோஷனலாக இருந்தேன் அவருக்கு தெரியும். 13 வருஷத்துக்கு முன்னாடி இருந்த லெட்டர் வந்து பேசுப்பொருளாக உள்ளது. அன்னிக்கு இருந்த கோபம், மொழி, என்னோட வாசக அறிவு என அதை வைத்து அந்த கடிதம் எழுதுனேன், இத்தனை வருசமா நான் சும்மா இருக்கல. பெரிய உழைப்பை போட்டு சினிமாவை கத்துக்கிட்டேன். தமிழ் சினிமாவிலேயே மாமன்னன் பார்த்த ஒரே ஆள் கமல் மட்டும் தான். அவர் படம் பார்த்துவிட்டு என் கையை குலுக்கி வாழ்த்து சொல்லும்போது நான் எவ்வித நடுக்கத்தில் இருந்தேன் என்பது கமலுக்கு மட்டுமே தெரியும்.
அந்த பதற்றம் குறையுறதுக்கு முன்னாடியே இது மாரியோட அரசியல் இல்ல.. நம்மோட அரசியல்ன்னு அவர் சொன்னதை நான் மிகப்பெரிய சாதனையா பார்க்குறேன். அந்த நெகிழ்ச்சியை விட எனக்கு என்ன வேணும். அந்த பதிலை வாங்கி என்னுடைய ஆன்மா, மனம் சாந்தியடையணும்.. அமைதிக்கு வரனும் அப்படிங்கிறதுக்கான வெளிப்பாடுதான் அது. அந்த அளவு அந்தப்படத்தோட தாக்கம் எனக்குள்ள இருக்கு.
ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியதை மத்தவங்க எப்படி புரிஞ்சிக்கிறாங்கன்னு தெரியல. நான் மேடையில பாசிட்டிவாதான் பேசினேன். அவர் கண்பார்த்துக்கிட்டேதான் நான் பேசினேன். அது திட்டமிடப்பட்ட பேச்சு அல்ல” என மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.