பொன்னியின் செல்வன் திரைப்படக் குழுவினருக்கு இயக்குநர் மணிரத்னம் விருந்து வைத்து வெற்றியைக் கொண்டாடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பொன்னியின் செல்வன்:


தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நெடுநாள் ஆசைக்கு தீனி போடும் வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் இரண்டாம் பாகம்  கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு  மணிரத்னம் இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளார்.


சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் சுமார் 500 கோடிகள் வரை வசூலித்து கோலிவுட்டின் மாபெரும் ஹிட்  படமாக இந்தப் படம் உருவெடுத்தது. தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரலில் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி, இரண்டாம் பாகம் முன்னதாக வெளியானது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஷோபிதா, சரத் குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு எனப் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார், ரவி வர்மன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 


எத்திசையிலும் வசூல்:


இந்தப் படம் 300 கோடிகள் வசூலை எட்டியுள்ளதாக முன்னதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


தொடர்ந்து இந்தப் படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில், முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படக் குழுவினருக்கு இயக்குநர் மணிரத்னம் விருந்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கிண்டி ரேஸ்கோர்ஸில் இந்த விருந்து விழா நடைபெற்றதாகவும், நடிகர்கள் பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி ஆகிய நடிகர்கள் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டெக்னீஷியன்கள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை 300க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்ற நிலையில், பொன்னியின் செல்வன் படைக்கு நன்றி என இங்கு பேனர் வைக்கப்பட்டு இருந்துள்ளது.


மணிரத்னம் அதிருப்தியா?


ஆனால் மற்றொருபுறம் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொள்ளாதது மணிரத்னத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாவலுக்கு மாறாக பொன்னியின் செல்வன் 2 திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கு கலவையான விமர்சனங்களே எழுந்தன.


மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பாகம் மந்தமான வசூலையே குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Manobala: "வெளிய சொல்ல முடியாத சேட்டை.. அழாமல் பேசுவது ரொம்ப சிரமம்.." மனோபாலா நினைவால் உருகிய மன்சூர், டெல்லி கணேஷ்..!