தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விடாமுயற்சி படத்தின் சமீபகால போஸ்டர் ரசிகர்களை ஆனந்தப்படுத்தி வருகிறது. 

விடாமுயற்சி:

நாளுக்கு நாள் வெளியாகும் ஒவ்வொரு புகைப்படத்திலும் அஜித் இளமையான தோற்றத்தில் இருப்பதே இதற்கு காரணம் ஆகும். மறுபுறம் குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் வித்தியாசமான கெட்டப்புகள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தப்படுத்தி வருகிறது. 


இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்திற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மகிழ் திருமேனி நன்றி:


இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் எங்களை வழிநடத்தினீர்கள், உத்வேகமாகவும், தன்னம்பிக்கையும் நீங்கள் நீங்களாகவே இருந்து அளித்ததற்கு எங்களது எல்லையற்ற அன்பும், நன்றியும். விடாமுயற்சி உண்மையிலே விடாமுயற்சியின் வெற்றியாக இருந்தது. இதற்கு குழு முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. நன்றி.






தனிப்பட்ட முறையில், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். முதல் நாள் முதல் கடைசி நாள் வரை நீங்கள் என் மீது காட்டிய அன்பும், அக்கறையும், எனக்குத் தந்த ஆதரவும் நன்றி. அதிக அன்பு மற்றும் மரியாதையுடன் மகிழ் திருமேனி. 


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


துணிவு படத்திற்கு பிறகு அஜித் நயன்தாராவின் கணவர்  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இதையடுத்து, லைகா நிறுவனத்திற்கு அளித்த கால்ஷீட்டில் இயக்குனராக மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 


பொங்கல் ரிலீஸ்:


அவரது இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. அஜித்துடன் இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமான அஜித் படமாக இல்லாமல் மிகவும் வித்தியாசமான ஆக்ஷன் படமாக விடாமுயற்சி இருக்கும் என்று கருதப்படுகிறது. 


இந்த படம் பெரும்பாலும் அஜர்பைஜானிலே எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு நீரவ்ஷா, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள விடாமுயற்சியில் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.