இயக்குநர் ராஜேஷ் இயக்கி ஆர்யா,தமன்னா, சந்தானம் நடிப்பில் வெளியாகி வந்த வேகத்தில் திரும்பிப்போனவாசுவுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படம் இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த இயக்குநர் ராஜேஷின் சரிவை உறுதி செய்த படம் என்றே சொல்லலாம். ட்ரெண்ட் செட் செய்து வந்த ராஜேஷின் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை இழந்து வந்ததற்கான காரணம் என்ன என்பதை காணலாம்.


ராஜேஷின் முதல் மூன்று படங்கள்


தனது முதல் படமாக சிவா மனசுல சக்தி,  இரண்டாவது படமாக பாஸ் என்கிற பாஸ்கரன், மூன்றாவது படமாக ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட மூன்று தொடர் வெற்றிகளை கொடுத்தார் ராஜேஷ். இந்த மூன்று படங்கள் மட்டுமே இயக்குநர் ராஜேஷூக்கு தனி ரசிகர்களை உருவாக்கியிருந்தது. இந்த மூன்று படத்திற்கும் மிகப்பெரிய பலம் என்னவென்றால் அது நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை தான். 


விவேக், நல்லதம்பி, பார்த்தா


இந்த மூன்று படங்களிலும் சந்தானத்திற்கு வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கதாநாயகனுக்கு உதவி செய்து படாதபாடு பாடும் ஒரு நண்பனாகவே மூன்று படங்களிலும் இருந்திருக்கிறார். அதுபோக படத்தில் ஒரு காதல் கதை முன்னிலையில் இருந்தது. இந்தக் கதையை ரசிக்கும் படியாக மாற்றியது சந்தானத்தின் பாத்திரம். எஸ்.எம். எஸ் இல் செல்ஃபோன்களுடன் ராசியில்லாதவராகட்டும், பாஸ் என்கிற பாஸ்கரனில் சலூன் கடை வைத்திருக்கும் நல்லதம்பியாகட்டும், கலர் கலராக உடை அணியும் பார்த்தா ஆகட்டும் மூன்று படங்களிலும் நடித்தது ஒரே ஆள் என்று நமக்கு படம் பார்க்கும்போது கிட்டதட்ட மறந்தே விடும்.


ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்கள்


ஆனால் தனது மிகப்பெரிய ஆயுதத்தை தேவையான இடங்களில் பயன்படுத்தாமல் முழுவதுமாக களத்தில் இறக்கிவிட்டார் ராஜேஷ். மற்ற கதைகளில் சந்தானம் துணைக் கதாபாத்திரம் தான் ஆனால் வி.எஸ்.ஓ.பி படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர். கிட்டதட்ட இரண்டாவது ஹீரோ அவர். ஒரு படத்தில் ரெண்டு ஹீரோக்கள் என்றால் காமெடி யார் செய்வது. மற்றப் படங்களில் இருந்தது போல் மையக்கதையாக எதுவும் இல்லாமல் காமெடியனை ஹீரோவாக்குவதையே கதையாக்குவதில் கவனம் மொத்தத்தையும் செலுத்திவிட்டார் இயக்குநர்.


அபத்தமான நகைச்சுவை


வி.எஸ்.ஓ.பி படத்திற்கு முன் வெளிவந்த ராஜேஷின் மற்றொரு தோல்விப் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இந்தப் படம் பிடித்தவர்களும் இருக்கிறார்கள். இந்தப் படம் முழுவதும்  ஒருவகையான அர்த்தமற்ற நகைச்சுவையையே கையாளப்பட்டிருக்கும். பேச்சுவழக்கில் சொன்னால் நாம் மொக்க காமெடி என்று சொல்வோம் இல்லையா அதே மொக்கை காமெடியைதான் ஸ்டைலாக பின்பற்றியிருப்பார்கள். இந்த வகையான  நகைச்சுவை ஒரு இயக்குநர் தனது நகைச்சுவைத் திறனை இழந்து வருகிறார் என்பதையே உணர்த்துகின்றன. அதிர்ஷ்டவசமாக அழகுராஜா படத்தில் சில காட்சிகள் நன்றாகவே இருந்தன. ஆனால் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்திலும் அதே மாதிரியான நகைச்சுவையை பயன்படுத்தியது ரசிகர்களுக்கு சலிப்பையே கொடுத்தது. மொக்கை காமெடியை ரசிக்க அவர்கள் தயார்தான். அதற்காக எல்லா முறையும் இல்லை.


சக்ஸஸ் ஃபார்முலாவை கண்டுபிடிப்பாரா


இயக்குநர் ராஜேஷ் அடுத்தடுத்து இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்டப் படங்களில் சுத்தமாக அவரது  நகைச்சுவை உணர்வு இல்லாமலே போனது. எல்லா இயக்குநர்களுக்கு ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கும் அந்த ஃபார்முலா குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயனற்று போகும்போது புதிய ஃபார்முலாவை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டிய நிலைவரும். நிச்சயம் ஒரு புது ஃபார்முலாவை இயக்குநர் ராஜேஷ் கண்டுபிடிப்பார் என்று நம்பலாம். அதற்காக அவரது ரசிகர்களும் காத்துக்கிடக்கின்றனர்.