சத்யராஜ்
வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் முன்னணி நடிகராக மக்களை கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ் . தற்போது மாதத்திற்கு ஒரு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். மூத்த இயக்குநர்கள் தொடங்கி இன்றைய தலைமுறை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நண்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, சிகரம் தொடு, பூஜை, பாகுபலி, மெர்சல், கடைக்குட்டி சிங்கம், கனா, வீட்ல விசேஷம், லவ் டுடே, சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இன்று சத்யராஜ் தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கூலி படக்குழு சார்பாக அவருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சத்யராஜூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்
தனது எக்ஸ் தள பதிவில் “கூலி படத்தில் உங்களுடன் பணியாற்றுவது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாக உள்ளது. மேலும் நிறைய கற்றுக்கொள்ளும் ஒரு பயணமாகவும் இது இருக்கிறது. எங்களைத் தொடர்ச்சியாக ஊக்குவித்து வரும் சத்யராஜூக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் , நாகர்ஜூனா , உபேந்திரா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகியது குறிப்பிடத் தக்கது.