நடிகர் விஜய் படம் என்றாலே பிரச்சினை வருகிறது என லியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 


செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் “லியோ”. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட ஒரு வார காலத்துக்கு 80% டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. இதனிடையே பல இடங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காமல் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் முழுவதும் கட் அவுட், பேனர்கள், தோரணம் என களைகட்டியுள்ளது. 


இதனிடையே நாளை லியோ படம் ரிலீசாவதையொட்டி இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ’விஜய்யை கையாள்வதில் மாஸ்டர் படத்துக்கும், லியோ படத்துக்கும் இடையே ஏதாவது வித்தியாசம் இருந்ததா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன லோகேஷ், ‘லியோ நடந்ததுக்கு காரணமே மாஸ்டர் படம் தான். அப்படி ஒரு படம் பண்ணி சக்ஸஸ் காட்டுன அப்புறம் தான்,  100% உங்க படமாவே இருக்கட்டும் என விஜய் சொன்னார். அதற்கு முழு காரணம் விஜய் கொடுத்த சுதந்திரம் தான். எங்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம் இருந்துச்சு என கேட்டால்,  இருவருக்குமான புரிதல் இன்னும் அதிகமானது என்றே சொல்லலாம்’ என கூறினார். 


தொடர்ந்து லோகேஷிடம், “விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு சின்ன சின்ன பிரச்சினை இருந்துட்டு தான் இருக்கு என ரசிகர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். விஜய்க்கு பதில் வேறு யாராவதை நடிக்க வைத்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது என நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நீங்களே பதில் சொல்லி விட்டீர்கள். அவர் படம் என்றாலே சின்ன சின்ன பிரச்சினை இருந்துட்டு தான் இருக்கு. எனக்கு அது மாஸ்டர் பட சமயத்தில் இருந்தே தெரியும். உதாரணம் ட்ரெய்லரில் வந்த கெட்ட வார்த்தை பயன்படுத்தியது சர்ச்சையாக மாறியது. விமர்சனங்கள் வந்த பிறகு அதை மியூட் செய்து விட்டோம். அதுவும் இல்லை என்றால் வேறு எதில் இருந்து பிரஷர் வந்திருக்கலாம்” என பதிலளித்தார்.