தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் கைதி என்ற ஆக்‌ஷன் படத்தை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம்பிடித்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.



டில்லி சீக்கிரம் திரும்ப வருவான்:


விக்ரம் படம் மூலமாக இவர் உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ், ரோலக்ஸ் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் லியோ படமும் இணைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படமாக எல்.சி.யூ. வரிசை படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.






இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கைதி படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “ அனைத்தும் தொடங்கியது இங்கேதான். இந்த யுனிவர்ஸ் உருவாவதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் கார்த்திக்கிற்கு மிக்க நன்றி. டில்லி விரைவில் திரும்ப வருவான்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


விரைவில் கைதி 2:


2019ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெளியான கைதி படம் வெளியாகி நேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் நேற்று இந்த பதிவை பதிவிட்டுள்ளார். கைதி படத்தின் முடிவிலே இரண்டாம் பாகத்தின் தொடக்கமாகவே காட்டியிருப்பார்கள்.


அதேபோல, விக்ரம் படத்தின் இறுதியிலும் டில்லி என்ற கதாபாத்திரத்தை குறிப்பிட்டு கார்த்தியின் குரல் ஒலிக்கும். லோகேஷ் கனகராஜூம் கைதி 2ம் பாகம் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், டில்லி விரைவில் மீண்டும் வருவார் என்ற லோகேஷ் கனகராஜின் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


போதைப்பொருள் கடத்தலை மையமாக எடுத்த கைதி படம் ஒரே இரவில் நடப்பது போல எடுக்கப்பட்டிருக்கும். கார்த்தியுடன் அர்ஜூன் தாஸ், ஜார்ஜ் மரியன், நரைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த கைதி படம் கார்த்தியின் திரை வாழ்வில் மற்றொரு ஏறுமுகத்தை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.