உத்தம வில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட கமல்ஹாசன் வேறு ஒரு படம் நடித்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


கடந்த 2015 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி கமல்ஹாசன் நடித்த “உத்தம வில்லன்” படம் வெளியானது. இந்த படத்தை நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி திருவொத்து, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், மறைந்த இயக்குநர் பாலசந்தர்,நாசர், ஜெயராம், மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத் என பலரும் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்த இப்படம் ரசிகர்ளிடையே பெரிய வரவேற்பை பெறாமல் படுதோல்வியடைந்தது. 


உத்தம வில்லன் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், படம் தோல்வியடைந்ததால் அந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை சந்தித்தது. இதனிடையே உத்தம வில்லனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக வெளிப்படையாகவே தெரிவித்தனர். இதனிடையே யூட்யூப் சேனல் ஒன்றில் உத்தமவில்லன் படத்தால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு லாபம் ஏற்பட்டதாக லிங்குசாமி தெரிவித்ததாக தகவல் வெளியானது. 


இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், “உலக திரை ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து FIRST COPY (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான "உத்தம வில்லன் எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும்.


இது திரு கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். "உத்தம வில்லன்' திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான 'வலை பேச்சு" என்கிற YOUTUBE சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு.லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களை கூறியுள்ளனர் இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என விளக்கமளித்துள்ளது.