துருவ நட்சத்திரம்
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா,வாரணம் ஆயிரம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை இயக்கிய கெளதம் மேனன் (Gautham Menon) தற்போது இயக்கி இருக்கும் படம் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram).
துருவ நட்சத்திரம்:
விக்ரம், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், விநாயகன், ஆர்.பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நவம்பர் 24ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது. 6 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை கடந்த 8 மாதங்கள் கடின உழைப்பால் பல்வேறு தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் கெளதம் மேனன்
படம் பழசாகிடுச்சுனு நினைக்கிறாங்க.
துருவ நட்சத்திரம் படத்திற்கு இருக்கு மிகப்பெரிய சிக்கலை விளக்கியுள்ளார் கெளதம் மேனன். “ஏற்கனவே பல வருடங்கள் கிடப்பில் இருந்ததால் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கூடுதலாக படத்தின் மீது கோர்ட்டில் வழக்கு இருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது.
இதன் காரணத்தினால் நான் தனிப்பட்ட முறையில் தெலுங்கு மற்றும் கன்னட வெளியீட்டிற்காக பல தரப்பு விநியோகஸ்தர்களிடம் பேசி படத்தின் மீது இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு விட்டன என்பதை உறுதிப்படுத்தி வருகிறேன். நீங்கள் நம்பாமல் கூட போகலாம், ஆனால் என்னுடைய படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டாலும் ஏதோ போன வாரம் படப்பிடிப்பு முடிந்தது போல் பார்க்க புதிதாக இருக்கிறது. அதனுடைய கதை எந்த வகையிலும் பழசாகிவிடவில்லை. இந்தப் படத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக திரையிட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்
படத்தைப் பாராட்டிய லிங்குசாமி
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தைப் பார்த்த இயக்குநர் லிங்குசாமி படத்தைப் பாராட்டியிருப்பது படத்தின் மீதான அபிப்ராயத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. துருவ நடத்திரம் படத்தை மும்பையில் பார்த்ததாகவும், படம் கதையாகவும் தொழில் நுட்பரீதியாகவும் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விநாயகன் கவரும் வகையில் நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அவருக்கு இயக்குநர் கெளதம் மேனன் தன்னுடைய நன்றியைப் பதிவு செய்திருக்கிறார்.