தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் லிங்குசாமி. ரன், ஆனந்தம், பையா உள்ளிட்ட சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்த லிங்குசாமி தற்போது 'பையா 2' படத்தை இயக்கி வருகிறார்.  



தியானம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்குநர் லிங்குசாமி தற்போது தியான பயிற்சியாளராக இருந்து வருகிறார். தன்னுடைய தியான குருவான ஷாஜியின் தியான பயிற்சி சங்கமத்தில் தியான பயிற்சிகளை கொடுத்து வருகிறார். தியானம் குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். "தியானம் செய்யலாம் என என்னுடைய நண்பர்களிடம் நான் சொன்னால் அவர்கள் உடனே சொல்லும் பதில் வயதானவர்கள் தானே அதை செய்வார்கள் என்பார்கள். இது தான் பலருக்கும் இருக்கும் பொதுவான கருத்து. ஆனால் என்னை பொறுத்தவரையில் தியானம் என்பது நம் வாழும் காலத்திலேயே செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நிகழும் நல்லது, கெட்டது என எதுவாக இருந்தாலும் தியானம் மூலம் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும்.  கடந்த 25 ஆண்டுகளாக நான் தியானம் மேற்கொண்டு வருகிறேன். என் வாழ்வில் தியானம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. என்னுடைய குருநாதர் பெயர் ஷாஜி. ஸ்ரீ ராமச்சந்திரா மிஷனின் தியான அமைப்பில் பயிற்சியாளராக இருந்து வருகிறேன்.   




ஹன்கா சாந்திவனம் என்ற ஒரு தியான மடம் ஹைதராபாத்தில் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமர்ந்து தியானம் செய்ய கூடிய அளவுக்கு பெரிய இடம். அங்கு ஒரு மிக பெரிய தியான நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய குருவின் பல நாள் கனவு. அந்த கனவு நனவாகும் நாள் நெருங்கி விட்டது. மார்ச் 14 - 16 வரை மகா சங்கமம் நடைபெற உள்ளது. உலகெங்கிலும் இருக்கும் சிறந்த குருநாதர்கள், பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். அரிதான இந்த சந்தர்ப்பத்தில் நான் கலந்துகொள்ள போகிறேன். நீங்களும் இந்த மகா சங்கமத்தில் கலந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்" என பேசியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. 






ஆன்மீகத்தின் மீதும் தியானத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் லிங்குசாமிக்கு ஆடியோ மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.