தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். 70 வயதைக் கடந்தாலும் இன்றும் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்புகள் குறையாமல் உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் கூலி. மேலும், அவர் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க உள்ளார்.
ராணா படப்பூஜை வீடியோ:
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருந்து கைவிடப்பட்ட படத்தின் பூஜை நிகழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த்தை வைத்து முத்து, படையப்பா ஆகிய பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
அவரது இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் ராணா. பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஏரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் ராணா ப்ரொடக்ஷன்ஸ் லிமிடெட் தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடந்த நிலையில், ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது.
கைவிடப்பட்டது ஏன்?
தற்போது இந்த படத்தின் பூஜை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, சோ, வாலி, கலைப்புலி தாணு, வைரமுத்து, பிரபு, ஆகியோர் முன்னிலையில், ஆர்.எம்.வீரப்பன் - கே.பாலச்சந்தர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வைத்தனர். படத்தின் நாயகியாக ஒப்பந்தமான தீபிகா படுகோனேவும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்த படத்தின் பூஜை முடிந்த பிறகு ரஜினிக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து, சிங்கப்பூருக்கு ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக சென்றார். இதன்பின்னர், ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று மீண்டும் திரும்பி வந்த பிறகு ராணா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ராணா படம் கைவிடப்பட்டது.
கோச்சடையான்:
அதேசமயம் ராணா படத்தின் முன்கதையாக கோச்சடையான் படம் ரஜினிகாந்தை வைத்து அனிமேஷனாக உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது. ராணா படம் ஒருவேளை எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்புகள் அதிகளவு இருந்திருக்கலாம் என்பதே திரைப்பட நிபுணர்களின் கணிப்பு ஆகும். அதன்பின்பு, கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி கூட்டணியில் உருவான லிங்கா படம் படுதோல்வி அடைந்தது. அதன்பின்பு, ரஜினிகாந்த் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களுடன் கூட்டணி சேரத் தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.