இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் உருவாகி கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக ரஜினிகாந்திற்கு அமைந்தது.
லிங்கா படத்தில் தலையிட்ட ரஜினிகாந்த்:
இந்த படத்திற்கு பிறகே ரஜினிகாந்த் தனது ரூட்டை மாற்றினார். இந்த நிலையில், இந்த படம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
இந்த லிங்கேசன் கதாபாத்திரம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சது. அவரு பாத்துட்டாரு. லிங்கேசன் கேரக்டர் முடிஞ்சது. ஆனா, நான் நிறைய ட்ரிம் பண்ண வேண்டியது இருக்கு சார். பாத்தாரு. நல்லா பாத்துட்டு கண்ணு எல்லாம் அவருக்கு கலங்கிடுச்சு. பிரமாதமா வந்துருக்கு. தயவு செஞ்சு ட்ரிம்மிங் பண்ணிடாதீங்க. எதைத் தூக்கப் போறீங்கனு கேட்டாரு.
ஃபீல் பண்ணிய ரஜினிகாந்த்:
எப்படியும் 1500 அடி தூக்கனும் சார். தூக்குனாதான் செகண்ட் ஆஃப்ல இந்த யூத் கேரக்டர் சீன்ஸ் எல்லாம் இருக்கு நிறைய. என்ன பண்றது? உடனே அவரு ஐயய.. அவன் ஹீரோ இல்ல, லிங்கேஸ்வரன்தான் ஹீரோ. முடிஞ்ச உடனே டக்குனு அவன் வந்தானா அப்ப வந்து டேமை இது பண்ணான், வில்லனை சாவடிச்சான் முடிஞ்சு போச்சு கதை. அது வந்து ஒரே ஒரு ரீல்ல முடிச்சுடுங்க. தயவு செஞ்சு இதை கெடுக்காதீங்க. இது அவ்ளோ நல்லா இருக்குதுனு ரொம்ப ஃபீல் பண்ணி சொன்னாரு.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
படுதோல்வி:
ரஜினிகாந்திற்காக முத்து, படையப்பா ஆகிய இரண்டு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் வெளியான இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதிபாபு, கருணாகரன், விஜயகுமார், ராதாரவி, நிழல்கள் ரவி என மிகப்பெரிய பட்டாளங்கள் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது.
குறிப்பாக, ரஜினிகாந்த் படங்களில் இடம்பெறும் அள்ளிக்கொடுக்கும் காட்சிகளே இந்த படத்திலும் வழக்கம்போல இருக்கிறது என்று பலரும் விமர்சித்தனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 2014ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இந்த படம் வெளியாகியது.
கே.எஸ்.ரவிக்குமார் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தின் தோல்விக்கு காரணம் ரஜினிகாந்த்தான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். படையப்பா படத்தையும் 2 இடைவேளை வைத்து வெளியிட ரஜினி திட்டமிட்டதும், பின்னர் கமல்ஹாசனின் அறிவுறுத்தலின்படி பல காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.