பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார் பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் !
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமதி மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் நோக்கம் பெண்களுடைய மனதின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். சத்யபாமா பல்கலைக்கழகத்தின் எம்.டி திருமதி மரியா ஜீனா ஜான்சன்., நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி C.K. குமாரவேல், இந்தியாவின் லைஃப் கோச்சிங் பயிற்சியாளர் புஜா புனீத் மற்றும் Successgyan India வின் நிறுவனர் சுரேந்திரன் ஜெயசேகர் ஆகியோர் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு
இது குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘ஒரு குழந்தை பிறந்தால், அது அழும் போது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த குழந்தை படிப்படியாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்வதை பார்த்து, ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதுபோல் இன்று, ஒரு தந்தையாக, எனது குழந்தை மல்லிகா ஒரு சிறந்த திறமையாளராக மாறியதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சொந்தக் குழந்தையை மற்றவர்கள் பாராட்டுவதை காண்பது எப்போதும் ஒரு வரப்பிரசாதம். அவள் என்னை விட புத்திசாலி, அவளுடைய வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அதை தெளிவாக நிரூபித்து வருகிறாள். இன்று, அவர் ஒரு நிபுணராக மாறிவிட்டார், சரியான வண்ண கலவையுடன் என்ன ஆடைகளை அணிய வேண்டும் என்று கூட அவர் எனக்கு பரிந்துரைக்கிறார்.
என் தந்தை என்னிடம் சொல்வார், அவருடைய ஆரம்ப நாட்களில், மக்கள் அவரை அவரது பெயரால் அழைப்பார்கள், பின்னர் கே.எஸ்.ரவிக்குமாரின் தந்தை என்று அழைப்பார்கள் என்பார். ஆனால் இன்று, அனைவரும் என்னை மல்லிகாவின் தந்தை என்று அழைப்பதில் வரலாறு மீண்டும் வந்துள்ளது, அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.” என்று பேசினார்.