திரைப்பட இயக்குநரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


சினிமாவில் கிருத்திகா


கடந்த 2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் கிருத்திகா. அப்போது நடிகராக இருந்த உதயநிதியின் மனைவி என்ற அடையாளத்துடன் வந்த அவர், முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்து அதனை மாற்றிக் காட்டினார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ என்ற படத்தையும், 2022 ஆம் ஆண்டு நடிகர் காளிதாஸ் ஜெயராமை வைத்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்கியிருந்தார். 


இப்படியான நிலையில் அடுத்ததாக கிருத்திகா, நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நித்யா மேனனை வைத்து “காதலிக்க நேரமில்லை” என்ற படம் ஒன்றை இயக்கி வருகிறார். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் என பலரும் நடிக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கிருத்திகா உதயநிதி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 






இயற்கைதான் தெய்வம் 


அவர் தனது பதிவில், “இயற்கையை கடவுள் என்று நினைத்து வணங்கும் காலம் இருந்தது... நாம் அனைவரும் அறிவாளிகளாக இருந்த காலம்” என பதிவிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பதில் தெரிவிக்கும் வகையில் கிருத்திகாவின் கணவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ”கண்களில் ஹார்ட்டின் பறக்கும் ஸ்மைலி”யை பதிவிட்டுள்ளார். இதனிடையே இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 


குறிப்பாக கிருத்திகா சமீபத்தில் திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் விழாவை குறிப்பிட்டுத்தான் அவர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி அரசியல் நோக்கத்திற்காக கட்டி முடிக்காத கோயிலை திறந்து வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் சிலருக்கும் காயம் ஏற்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது. இப்படியான நிலையில் கிருத்திகாவின் இந்த பதிவு இணையவாசிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.