எனர்ஜெடிக், இளமை, புதுமை என்ற வார்த்தைகளுக்கு மிக பொருத்தமானவர் என்றால் அது இயக்குநர் கதிர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது கவிஞர் வாலியிடம் இருந்த வந்த பாராட்டு.
சினிமாவில் காதல் இல்லாத சப்ஜெக்ட்டே இருக்காது. அந்த அளவுக்கு காதல் காதல் காதல்... என இளவட்ட சினிமா ரசிகர்களுக்கு காதலை ஊட்டி வளர்த்த படங்கள் என்றால் நினைவுக்கு வரும் படங்கள் காதல் தேசம், காதலர் தினம். இந்த படங்களை இயக்கிய இயக்குநர் கதிர் பற்றி சில சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
1991ம் ஆண்டு மிகவும் கனமான ஒரு இதயத்துடன் கனக்க வைக்கும் காதலை காட்சிப்படுத்திய ஒரு படம் தான் 'இதயம்'. சொல்லாமல் இருக்கும் காதல் என தன்னுடைய முதல் படத்துலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் கதிர். விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மட்டுமே படங்களை எடுத்து இருந்தாலும் ஒவ்வொன்றும் வைரங்கள். காலங்களை கடந்தும் கொண்டாட வைக்கும் ரத்தினங்களாக ஜொலிக்க வைத்தது தான் கதிர் ஸ்பெஷலிட்டி.
அடுத்ததாக நடிகர் பிரபுவை வைத்து 1993 ஆம் ஆண்டு உழவன் என்னும் படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கல்லூரி நாட்கள் என்பது எல்லோர் மனத்திலும் அப்படியே பதிய கூடிய ஒரு இனிமையான காலகட்டம். அதை அப்படியே ஃபிரெஷாக 'காதல் தேசம்' படம் மூலம் கொண்டு வந்தவர். அந்த காலகட்டத்தை சேர்வர்கள் மட்டுமின்றி அப்போது பிறக்காதவர்கள் கூட இன்று வரை கொண்டாடும் ஒரு படமாக இருந்து வருகிறது 'காதல் தேசம்' திரைப்படம். மிகவும் கலர்புல்லான ஜாலியான யூத்புல் படமாக அமைந்தது. மாணவர்கள் ரசித்து கொண்டாடிய ஒரு படம் காதல் தேசம். 1996 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 27 ஆண்டுகளை கடந்தும் இன்றும் கொண்டாடப்படும் ஒரு காதல் காவியம்.
அடுத்தடுத்து படம் இயக்கும் இயக்குனர்களை காட்டிலும் சற்று மாறுபட்டு இடைவேளை விட்டு படங்களை இயக்குவதை தனி ஸ்டைலாக கொண்டவர் கதிர். அப்படி மூன்று ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு 1999ம் ஆண்டு புதுவிதமான ஒரு காதலை, அதாவது ஈமெயில் காதலை அறிமுகப்படுத்திய ஒரு படம். இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு புதுமாதிரியான ரிச்சான படமாக காதலர் தினம் அமைந்தது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத புது முகங்களாக இருந்தாலும் ஸ்ட்ராங்கான திரைக்கதை மூலம் அஸ்திவாரத்தை பலமாக்கியவர்.
இதயம், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் காதலை காதலியிடம் வெவ்வேறு மாதிரி வெளிப்படுத்தும் விதத்தில் கூட வித்தியாசம் காட்டியவர் இயக்குநர் கதிர். இன்று காதலும் காதலர்களும் அனைத்திலுமே மிகவும் ஃபாஸ்டாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த காதலை வெளிப்படுத்துவதற்கு முன்னர் அவர்களுக்குள் எழும் அந்த உணர்வையே படமாக்கி வெற்றி கண்டவர். கதிரின் படங்கள் அன்றும் இன்றும் என்றும் காதலை மனதுக்குள் ஃப்ரெஷாக கொண்டு வரும் மேஜிக்கல் மூவிஸ். இன்று படங்களை இயக்காவிட்டாலும் என்றும் கொண்டாடப்படும் இயக்குநர்களில் கதிருக்கும் முக்கிய இடமுண்டு என்பதை மறுக்க முடியாது.