கேப்டன் மில்லர்
ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தற்போது இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். தனுஷ் கதநாயகனாக நடிக்க பிரியங்கா மோகன் , கன்னட நடிகர் ஷிவராஜ் குமார் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது கேப்டன் மில்லர்.
மூன்று பாகங்கள்
கேப்டன் மில்லர் படத்தை மொத்தம் மூன்று பாகங்களாக இயக்க திட்டமிட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார், தற்போது வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் இந்தப் வரிசையில் இரண்டாம் பாகம் என்று அவர் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்க தனக்கு திட்டம் இருப்பதாகவும் அதற்கு மிகப்பெரிய பொருட்செலவு தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களிடையே எந்த மாதிரியான எதிர்பார்ப்பைப் பெறுகிறது என்பதை பார்த்தப் பின்பே அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கலாமா என்று முடிவு செய்ய இருப்பதாக அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
1930 முதல் 1940 காலக்கட்டத்தில் நடைபெறும் கதையே கேப்டன் மில்லர். தன்னுடைய விடுதலைக்காக போராளியாக மாறும் ஒரு சாதாரண மனிதனி கதையே கேப்டன் மில்லர் படத்தின் சாராம்சன் என்று அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று வரையறுக்க முடியாத இயல்புடையதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முதல் பாடல்
இந்நிலையில் இன்று கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான கில்லர் கில்லர் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. கேபர் வாசுகி இந்தப் பாடலை எழுதியுள்ள நிலையில் நடிகர் தனுஷ் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் பயங்கராமான கோபத்தை வெளிப்படுத்து வகையில் அமைந்திருக்கிறது