சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜ். தனது மகன் இயக்குநரானப்பின் அவரது படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான பீட்சா படத்தில் ஒரு சிறிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனது நடிப்பு தனது மகனுக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னை நடிக்க வைத்ததற்காக தனது மகன் ரொம்ப வருத்தப்பட்டதாகவும் கஜராஜ் சித்ரா லட்சுமணனின் பேட்டியில் கூறியுள்ளார்.
நாளை இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது குறும்படங்கள் மூலம் பெரியளவில் கவனமீர்த்தவர் கார்த்திக் சுப்பராஜ். 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அமோக வெற்றிபெற அடுத்தடுத்து ஜிகர்தண்டா , பேட்ட , மஹான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , ரெட்ரோ , என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் படங்களில் அவரது தந்தை கஜராஜை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நாம் நிச்சயம் பார்க்கலாம். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அவரது தந்தை இருவரும் தீவிர ரஜினிகாந்த் ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. பேட்டி ஒன்றில் தனது மகன் இயக்கிய படங்களில் நடித்தது குறித்து அவர் விரிவாக பகிர்ந்துகொண்டுள்ளார். தனது முதல் படத்தில் தனது நடிப்பை பார்த்து அதிருப்தியடைந்த மகன் இன்னொரு படத்தில் தனது நடிப்பை பாராடியதாகவும் அவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்பாவின் நடிப்பை பார்த்து கடுப்பான கார்த்திக் சுப்பராஜ்
சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் பேச்ய கஜராஜ் " என் மகன் குறும்படம் இயக்கிவந்தபோதே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். முதல் படத்தை அவன் இயக்கப்போகிறான் என்று தெரிந்தபோதே ஏதாவது ஒரு சின்ன ரோல் தரும்படி கேட்டுக்கொண்டே. பீட்சா படத்தில் ஒரு சிறிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் கேட்டேன் என்று எனக்கு ரோல் கொடுத்தாலும் என்னை அந்த படத்தில் நடிக்க வைத்ததற்காக அவன் ரொம்ப வருத்தப்பட்டான். இனிமேல் சொந்தக்காரர்களை படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று சொன்னான். இது உன்னுடைய படம் . இதில் இன்னொருவர் பணம் போடுகிறார்கள். நான் நன்றாக நடிக்காததால் உன் படம் கெட்டுப்போகக் கூடாது அதனால் விருப்பமில்லை என்றால் என்னை நடிக்க வைக்கவேண்டாம் என்று தெளிவாக அவனிடம் சொல்லிவிட்டேன். ஜகமே தந்திரம் படத்தில் நடித்தபோது ஒரு பெரிய சீனை ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். அந்த காட்சியில் நான் சிறப்பாக நடித்திருப்பதாக என் மகன் என்னை பாராட்டினான். " என்று அவர் கூறியுள்ளார்.
